சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் முடிகாணிக்கை செலுத்த கட்டணம் ரத்து
முடிகாணிக்கை செலுத்த கட்டணம் ரத்து
சோளிங்கர்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் வருகிறார்கள். இங்குள்ள பெரியமலை 1,305 படிக்கட்டுகளும், சின்னமலை 406 படிக்கட்டுகளும் கொண்டது. இந்த இரண்டு மலைகளிலும் யோக நரசிம்மர், தாயார், யோக ஆஞ்சநேயர் சுவாமியை தரிசனம் செய்ய வேண்டும். நரசிம்மர் ஆஞ்சநேயர் சுவாமி யோக நிலையில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர்.
தக்கான் குளக்கரையில் உள்ள முடி காணிக்கை செலுத்தும் இடத்தில் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தி வருகின்றனர். முடி காணிக்கை செலுத்த கோவில் நிர்வாகம் சார்பில் ஒருவருக்கு 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, இனிவரும் காலங்களில் கோவில்களில் கட்டணமில்லாமல் முடி காணிக்கை செலுத்தலாம் என அறிவித்தார். அதன்படி சோளிங்கர் யோக நரசிம்மர் கோவிலில் இந்ததிட்டம் நேற்று முன்தினம் நடைமுறைப்படுத்தப் பட்டது. முடி காணிக்கை செலுத்த வரும் பக்தர்கள் கட்டணம் செலுத்தாமல் மொட்டை அடித்து சுவாமிக்கு முடி காணிக்கை செலுத்தினார்கள். இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.