பெண்ணாடம் அருகே ஏரி ஆக்கிரமிப்பு அகற்றம்

அதிகாரிகள் நடவடிக்கை

Update: 2021-09-07 17:26 GMT
பெண்ணாடம், 
பெண்ணாடம் அருகே வெண்கரும்பூர் கிராமத்தில் ஊரக வளர்ச்சித்துறைக்கு  சொந்தமான குளம் உள்ளது. இந்த குளத்தை அதே பகுதியை சேர்ந்த 4 பேர் ஆக்கிரமித்து கரும்பு, தேக்கு பயிரிட்டு வருவதாக மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியத்துக்கு புகார் சென்றது. இதையடுத்து ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றுமாறு திட்டக்குடி வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும், நல்லூர் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கும் கலெக்டர் பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டார். 
அதன்அடிப்படையில் நல்லூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுருநாதன், திட்டக்குடி துணை தாசில்தார் ஜெயச்சந்திரன், ஒன்றிய பொறியாளர் சண்முகம் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் விரைந்து சென்று வெண்கரும்பூர் குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினர். பெண்ணாடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்