கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைத்ததற்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவர் பெருமாள் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட நிர்வாகிகள் தயாளன், ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைத்ததற்கு அரசாணைப்படி உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் செல்போன் கோபுரங்களுக்கு வாடகை கொடுப்பது போன்று உயர்மின் கோபுரங்களுக்கு சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு வாடகை வழங்க வேண்டும்.
அதேபோல் எதிர்காலத்தில் விவசாய நிலங்கள் பாதிக்கப்படாமல் தடுப்பதற்கு சாலையோரத்தில் பூமிக்கு அடியில் மின்பாதை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர். இதைத் தொடர்ந்து அந்த கோரிக்கைகள் தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.