உள்ளாட்சித்தேர்தலைநேர்மையாக நடத்த வேண்டும் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பேட்டி
உள்ளாட்சித்தேர்தலைநேர்மையாக நடத்த வேண்டும்
நெல்லை:
ஆளுங்கட்சிக்கு சாதகமாக வார்டு மறுவரையறை செய்யப்பட்டதாக சந்தேகம் எழுந்துள்ளதால், உள்ளாட்சி தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
இது தொடர்பாக நெல்லையில் அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
பள்ளி கட்டணம்
தமிழகத்தில் பள்ளி மாணவர்களிடம் 85 சதவீத கட்டணத்தை வசூலிக்க அனுமதித்துள்ள நிலையில், அதனை 3 தவணைகளாக செலுத்த அனுமதிக்க வேண்டும். பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்ட நிலையில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதால், மருத்துவ வல்லுனர்களுடன் ஆலோசித்து உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
நெல்லையில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும். அடிக்கடி மின்தடை ஏற்படுவதை தடுக்கும் வகையில், பூமிக்கடியில் மின் ஒயர்களை கேபிள் முறையில் பதிக்க வேண்டும். நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் புதிய தொழிற்சாலைகளை உருவாக்கி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். தாமிரபரணி- நம்பியாறு- கருமேனியாறு நதிநீர் இணைப்பு திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.
கூட்டணி தொடரும்
கடந்த தேர்தலில் தி.மு.க. அளித்த வாக்குறுதியின்படி, கல்விக்கடன், நகைக்கடன், மகளிர் சுயஉதவிக்குழு கடன் போன்றவற்றை உடனே தள்ளுபடி செய்ய வேண்டும். அரசியல் காழ்ப்புணர்ச்சியின்றி கோடநாடு விவகாரத்தில் சட்ட ரீதியான நடவடிக்கைகள் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அனுமதிக்க வேண்டும். அ.தி.மு.க., பா.ஜ.க.வுடனான எங்கள் கூட்டணி வருகிற உள்ளாட்சி ேதர்தலிலும் தொடரும்.
தேர்தலை நேர்மையாக...
உள்ளாட்சி தேர்தலில் எந்தெந்த இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்து கட்சியினருடன் மாவட்ட வாரியாக ஆலோசனை நடத்தி வருகிறேன்.
தமிழகத்தில் வார்டு மறுவரையரை ஆளும் கட்சிக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தி விடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி நேர்மையாக தேர்தலை நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆலோசனை கூட்டம்
முன்னதாக ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, நெல்லை வண்ணார்பேட்டை ஓட்டலில் த.மா.கா. நிர்வாகிகளுடன் ஜி.கே.வாசன் ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர், முன்னாள் எம்.பி. ராம்பாபு, மாநில செயலாளர்கள் ஏ.பி.சரவணன், நெல்லை மத்திய மாவட்ட தலைவர் சுத்தமல்லி முருகேசன், நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் வீரை மாரித்துரை, சிறுபான்மை பிரிவு ரமேஷ் செல்வன், பாளையங்கோட்டை பகுதி தலைவர் பிலால், இளைஞர் அணி ஜெகநாத ராஜா, வக்கீல் கிருஷ்ணகுமார், வர்த்தக அணி மாவட்ட தலைவர் சக்சஸ் புன்னகை உள்பட பலர் கலந்து கொண்டனர்.