முதுமலையில் யானை சவாரி தொடங்கியது

முதுமலையில் 1½ ஆண்டுகளுக்கு பிறகு யானை சவாரி தொடங்கியது. ஆனால் மழை பெய்வதால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

Update: 2021-09-06 21:29 GMT
கூடலூர்

முதுமலையில் 1½ ஆண்டுகளுக்கு பிறகு யானை சவாரி தொடங்கியது. ஆனால் மழை பெய்வதால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

புலிகள் காப்பகம்

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகம் உள்ளது. இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்களுக்காக வாகன மற்றும் யானை சவாரி நடைபெறுவது வழக்கம். 
ஆனால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவலால் முதுமலை புலிகள் காப்பகம் மூடப்பட்டது. 

வாகன மற்றும் யானை சவாரி ரத்து செய்யப்பட்டதோடு, சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா தொற்று குறைந்தபோது முதுமலை புலிகள் காப்பகம் திறக்கப்பட்டாலும், வாகன சவாரி மட்டுமே நடந்தது. எனினும் அதன்பிறகு கொரோனா பரவல் அதிகரித்ததால், அந்த செயல்பாடும் நிறுத்தப்பட்டது.

யானை சவாரி

இதையடுத்து கடந்த 3-ந் தேதி முதல் மீண்டும் முதுமலை புலிகள் காப்பகம் திறக்கப்பட்டது. மேலும் வாகன சவாரி தொடங்கப்பட்டது. ஆனால் யானை சவாரி மட்டும் தொடங்கப்படவில்லை. எனினும் சுற்றுலா பயணிகள் வளர்ப்பு யானைகளை கண்டு ரசிக்க அனுமதிக்கப்பட்டது.

இந்த நிலையில் சுமார் 1½ ஆண்டுகளுக்கு பிறகு நேற்று காலை 7 மணி முதல் முதுமலை புலிகள் காப்பகத்தில் யானை சவாரி தொடங்கப்பட்டது. முன்னதாக யானைகளுக்கு பாகனங்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து யானைகளின் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியோடு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

மழையால் அவதி

இதற்கிடையில் முதுமலை புலிகள் காப்பகத்தில் திடீரென மழை பெய்தது. விட்டுவிட்டு பெய்த மழையால் யானை சவாரிக்கு வந்த சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர். மேலும் யானை சவாரி பாதிக்கப்பட்டது. இது தவிர வனத்துறைக்கு சொந்தமான தங்கும் விடுதிகளும் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்