காய்ந்த மிளகாய்களை எரித்து காட்டுயானைகளை விரட்டும் பணி
கூடலூர்-முதுமலை எல்லையோரங்களில் காய்ந்த மிளகாய்களை எரித்து காட்டுயானைகளை விரட்டும் பணி நடக்கிறது. வனத்துறையினரின் இந்த புதிய முயற்சிக்கு பாராட்டு குவிகிறது.
கூடலூர்
கூடலூர்-முதுமலை எல்லையோரங்களில் காய்ந்த மிளகாய்களை எரித்து காட்டுயானைகளை விரட்டும் பணி நடக்கிறது. வனத்துறையினரின் இந்த புதிய முயற்சிக்கு பாராட்டு குவிகிறது.
ஊருக்குள் வரும் காட்டுயானைகள்
கூடலூர், முதுமலை வனப்பகுதியில் இருந்து காட்டுயானைகள் ஊருக்குள் அதிகளவில் வருகிறது. குறிப்பாக விநாயகன் என்ற காட்டுயானை அட்டகாசம் அதிகரித்து உள்ளது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். அந்த காட்டுயானை ஊருக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். எனினும் எந்த பலனும் ஏற்படவில்லை.
இந்த நிலையில் கூடலூர் கோட்ட வன அலுவலர் கொம்மு ஓம்காரம் உத்தரவின்பேரில் வனத்துறையினர் காட்டுயானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க புதிய முயற்சியை மேற்கொண்டு உள்ளனர்.
காய்ந்த மிளகாய்கள்
அதன்படி காட்டுயானைகள் வந்து செல்லும் முக்கிய இடங்களான ஓடக்கொல்லி, கோழிக்கண்டி, கேளக்கொல்லி உள்ளிட்ட சில பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மாலை முதல் அதிகாலை வரை வனச்சரகர் கணேசன் தலைமையிலான வனத்துறையினர் முகாமிட்டு தீ மூட்டி வருகின்றனர். தொடர்ந்து காய்ந்த மிளகாய்களை தீயில் போட்டு எரிக்கின்றனர்.
இதன் மூலம் பரவும் புகையால் கண் எரிச்சல் ஏற்படுகிறது. இதனால் காட்டுயானைகள் ஊருக்குள் வராமல் உள்ளது. இந்த புதிய முயற்சிக்கு பலன் கிடைத்து உள்ளதால் பொதுமக்கள் மட்டுமின்றி வன ஊழியர்களும் சற்று நிம்மதி அடைந்து இருக்கின்றனர். அதற்கு வனத்துறைக்கு பாராட்டும் குவிகிறது.
முகத்தை மூடி...
இதுகுறித்து வனச்சரகர் கணேசன் கூறியதாவது:- கூடலூர்- முதுமலை கரையோரம் அகழி இருந்தாலும் காட்டுயானைகள் எளிதாக கடந்து ஊருக்குள் புகுந்து விடுகிறது. இதனால் அதிகாரிகளின் ஆலோசனையின்பேரில் இரவு முழுவதும் எல்லையோரங்களில் தீ மூட்டி காய்ந்த மிளகாய்களை போட்டு எரித்து வருகிறோம்.
அப்போது காற்றில் பரவும் புகையால் காட்டுயானைகள் ஊருக்குள் வருவதில்லை. இந்த பணியில் ஈடுபட்டுள்ள வன ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க துணியால் நன்கு முகத்தை மூடி கொள்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.