விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பிய புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் ரெயில்
பாபநாசம் ரெயில்வே கேட்டில் லாரி மோதியது. அந்த நேரத்தில் அந்த வழியாக வந்த புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் ரெயில் அதிர்ஷ்டவசமாக விபத்தில் இருந்து தப்பியது. இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பாபநாசம்;
பாபநாசம் ரெயில்வே கேட்டில் லாரி மோதியது. அந்த நேரத்தில் அந்த வழியாக வந்த புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் ரெயில் அதிர்ஷ்டவசமாக விபத்தில் இருந்து தப்பியது. இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ரெயில்வே கேட்டில் லாரி மோதியது
ராமேசுவரத்தில் இருந்து புவனேஸ்வருக்கு வாரந்தோறும் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் ராமேசுவரத்தில் இருந்து புறப்பட்டு ராமநாதபுரம், சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, கும்பகோணம் வழியாக சென்னை சென்று அங்கிருந்து புவனேஸ்வருக்கு செல்கிறது.
நேற்று முன்தினம் ராமேசுவரத்தில் இருந்து புறப்பட்ட புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் ரெயில் மாலை 3.45 மணி அளவில் தஞ்சை மாவட்டம் பாபநாசம் ரெயில் நிலையம் அருகே வந்தது. இதனால் ரெயில்வே கேட்டை பணியாளர்கள் மூட முயன்றனர். அப்போது தஞ்சை மாவட்டம் வல்லத்தில் இருந்து பட்டீஸ்வரம் நோக்கி செம்மண் ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வந்த லாரி, முதல் பக்க ரெயில்வே கேட்டை தாண்டி அடுத்த பக்க கேட்டின் மீது பயங்கரமாக மோதியது.
விபத்தில் இருந்து தப்பியது
லாரி மோதிய வேகத்தில் ரெயில்வே கேட் வளைந்து சேதம் அடைந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த லாரி டிரைவர் லாரியை அப்பகுதியில் நிறுத்தினார். இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் ரெயில்வே கேட்ைட புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்து சென்றது.
ஒரு சில நிமிடங்கள் முன்பு இந்த சம்பவம் நடந்து இருந்தால் புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்தில் சிக்கி இருக்கும். அதிர்ஷ்டவசமாக இந்த ரெயில் விபத்தில் இருந்து தப்பியது.
போக்குவரத்து பாதிப்பு
ரெயில்வே கேட் சேதம் அடைந்ததால் பாபநாசம்- சாலியமங்கலம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றன.
இது குறித்து தகவல் அறிந்த தஞ்சாவூர் ரெயில் நிலைய இளநிலை பொறியாளர், கும்பகோணம் ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
கைது
இதைத்தொடர்ந்து கும்பகோணம் ெரயில்வே பாதுகாப்பு படை போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு ரயில்வே கேட் மீது மோதிய லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் லாரி டிரைவர் தஞ்சாவூரை சேர்ந்த பெரமையனை(வயது 43) கைது செய்தனர்.
மேலும் கும்பகோணத்தில் இருந்து 25-க்கும் மேற்பட்ட ரயில்வே பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சேதம் அடைந்த ரயில்வே கேட்டை சுமார் 9 மணி நேரம் போராடி சீரமைத்தனர்.