சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பெரம்பலூர்:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வழிபாட்டு தலங்களில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் வழிபாட்டுக்கு தடை விதித்து அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் மற்றும் தேவாலயங்கள், பள்ளி வாசல்களில் பொதுமக்கள் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று வழக்கம்போல் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டு, பொதுமக்கள் வழிபாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. நேற்று திங்கட்கிழமை மற்றும் ஆவணி மாத அமாவாசையையொட்டி பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூரில் பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் கோவிலின் உள்ளே பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதிக்கப்படாததால், நேற்று கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர். மேலும் பெரம்பலூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்களை சேர்ந்த பக்தர்களும் பயபக்தியுடன் அம்மனை தரிசனம் செய்து சென்றனர்.