தொடர் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு: கொல்லிமலை சிற்றருவியில் தண்ணீர் கொட்டுகிறது

தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கொல்லிமலை சிற்றருவியில் தண்ணீர் கொட்டுகிறது.

Update: 2021-09-06 18:46 GMT
நாமக்கல்:
தொடர்மழை
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்தநிலையில் நேற்று முன்தினம் சுற்றுலா தலமான கொல்லிமலையில் கனமழை பெய்தது. இதனால் அங்கு குளிர்ச்சியான சீதாஷ்ண நிலை நிலவி வருகிறது. மேலும் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
தொடர் மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கொல்லிமலையில் உள்ள சிற்றருவியில் கூடுதலாக தண்ணீர் கொட்டியது. இதில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். மேலும் அவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று இயற்கை அழகை கண்டு ரசித்தனர். நேற்றும் கொல்லிமலையில் மழை பெய்தது.
மூழ்கிய சிற்றணை
இதனிடையே தொடர் மழையால் பரமத்திவேலூர் அருகே உள்ள செருக்கலை, மேல்சாத்தம்பூர், மேலப்பட்டி, ஆரியூர்பட்டி, ராமதேவம், கூடச்சேரி ஆகிய பகுதிகளில் உள்ள ஏரி மற்றும் குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. மேலும் பரமத்தி அருகே உள்ள இடும்பன் குளத்திற்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
திருமணிமுத்தாற்றில் நீர் வரத்து அதிகரிப்பால் செருக்கலை, ராமதேவம், பில்லூர், கூடச்சேரியில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தரைப்பாலங்களை தொட்டபடி தண்ணீர் செல்கிறது. மேலும் பில்லூரில் உள்ள சிற்றணையை மூழ்கடித்தப்படி தண்ணீர் பாய்தோடி வருகிறது. தொடர் தண்ணீர் வரத்தால் தற்போது திருமணிமுத்தாற்றில் ஏராளமான மீன்கள் கிடைத்து வருகிறது. இதனால் மீனவர்கள் மற்றும் திருமணிமுத்தாறு கரையோர பகுதி மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மழையளவு
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று காலை 7 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-
கொல்லிமலை-50, சேந்தமங்கலம்-48, நாமக்கல்-25, திருச்செங்கோடு-21, மங்களபுரம்-16, எருமப்பட்டி-15, கலெக்டர் அலுவலகம்-15, ராசிபுரம்-13, குமாரபாளையம்-12, புதுச்சத்திரம்-8, பரமத்திவேலூர்-2. மாவட்டத்தின் மொத்த மழை அளவு 225 மி.மீட்டர் ஆகும்.
இதனிடையே நேற்று மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. வெண்ணந்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான அலவாய்ப்பட்டி, மாட்டுவேலம்பட்டி, .அத்தனூர். நடுப்பட்டி, தொட்டிபட்டி, அக்கரைப்பட்டி, மதியம்பட்டியில் நேற்று மாலை பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் செய்திகள்