பொள்ளாச்சி
கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. பாதிப்பு குறைந்ததால் கடந்த 1-ந்தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடித்து பள்ளிகள் திறக்கப்பட்டன.
மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி மாணவ- மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது. இதில் பொள்ளாச்சி நகராட்சி, வடக்கு, தெற்கு, ஆனைமலை, சுல்தான்பேட்டை ஒன்றியங்களில் 1000 பேரிடம் இருந்து சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.
இதில் பொள்ளாச்சி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவிகள் 2 பேருக்கும், தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி, புரவிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவன், சுல்தான்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் 3 பேருக்கும் கோவை அருகே உள்ள அரசூர் அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ்-1 மாணவியை சேர்த்து மொத்தம் 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து பள்ளிகளில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப் பட்டு உள்ளன. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் மாணவ-மாணவிகள் 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, ஆசிரியர்கள், மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
மேலும் தொற்று உறுதி செய்யப்பட்ட மாணவ-மாணவிகளின் வகுப்பறைகள் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டது. அந்த வகுப்பறைகளை ஒரு வாரத்திற்கு திறக்க கூடாது என்று ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அதுபோன்று பள்ளி வளாகம், கழிப்பறை ஆகிய பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. பாதிப்பு ஏற்பட்ட மாணவ- மாணவிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்த விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.