குடியாத்தத்தில் ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்து
குடியாத்தத்தில் ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்து
குடியாத்தம்
சென்னையில் இருந்து பேரணாம்பட்டுக்கு குடியாத்தம் வழியாக நேற்று மதியம் ஒரு கார் சென்றது. காரில் 2 பேர் பயணம் செய்தனர். குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் தரைப்பாலம் வழியாக சென்றபோது இது ஒரு வழிப்பாதை என எதிரே வந்த வாகன ஓட்டிகள் கூறியுள்ளனர். உடனே காரில் இருந்தவர்கள் தரைப்பாலத்திலேயே காரை திருப்பி உள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக தரைப்பாலத்தின் ஓரத்தில் மண்ணில் சக்கரம் சிக்கி கார் ஆற்றில் கவிழ்ந்தது.
இதைபார்த்த அந்தப்பகுதி பொதுமக்கள், பழைய இரும்பு கடை வைத்திருக்கும் அ.ம.மு.க. பிரமுகர் நவ்ஷாத் உள்ளிட்டோர் விரைந்து சென்று காரில் இருந்தவர்களை பத்திரமாக மீட்டனர். உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
பின்னர் கீரேன் கொண்டுவரப்பட்டு கார் மீட்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்குப்பின் காரில் வந்தவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
கெங்கையம்மன் கோவில் தரைப்பாலம் கவுண்டன்ய மகாநதி ஆற்றின் குறுக்கே உள்ளது. ஆற்றில் தண்ணீர் போகும்போது அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்கும் பொருட்டு இருபுறமும் இரும்புத் தடுப்புகள் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.