மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் நிறுவனங்கள் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் வலியுறுத்தல்
மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் நிறுவனங்கள் வேலைவாய்ப்பு வழங்கவேண்டும் என்று கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ராணிப்பேட்டை
மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் நிறுவனங்கள் வேலைவாய்ப்பு வழங்கவேண்டும் என்று கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பங்குத்தொகை
மாற்றுத் திறனாளிகளுக்கு சமவாய்ப்பு மற்றும் சமஉரிமை வழங்கும் சட்டம் 2016-ன் படி அனைத்து தனியார் நிறுவனங்களிலும் 5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் மாற்றுத்திறனாளி பணியாளர்களைக் கொண்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசின் ஊக்கத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் அதிக அளவு மாற்றுத்திறனாளிகளை பணியாளர்களாக கொண்ட நிறுவனங்களுக்கு பணியாளர்களுக்கு வழங்கப்படும் வருங்கால சேமிப்பு நல நிதி மற்றும் பணியாளர்களுக்கான காப்பீட்டுத்தொகை ஆகியவற்றிற்கு நிறுவனங்கள் செலுத்த வேண்டிய பங்கு தொகையினை மாற்றுத்திறனாளிகளுக்கான அதிகாரம் வழங்கும் துறையே செலுத்திவிடும்.
அதேபோன்று பணியாளர்களுக்கு வழங்கப்படும் பணிக்கொடையில் நிறுவனங்கள் செலுத்தும் தொகையில் மூன்றில் ஒரு பங்கு தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு தொழிற்பயிற்சி அளித்து பணியில் சேர்த்துக்கொண்டால் பயிற்சி காலத்திற்கான உதவித் தொகை ஆகியவற்றை மாற்றுத் திறனாளிகளுக்கான அதிகாரம் வழங்கும் துறையே செலுத்தும்.
வேலைவாய்ப்பு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் மத்திய அரசின் ஊக்கதொகை மற்றும் சலுகைகள் பெற்று பயனடையுமாறும், இவ்வாய்ப்பினை பயன்படுத்தி அதிக அளவில் மாற்றுதிறனாளிகளுக்கு வேலை வாய்ப்பினை வழங்கி தகுதியான மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை மேம்பாட்டிற்கு உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.