கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கோவில்பட்டி:
கயத்தாறு தாலுகா சிதம்பரம்பட்டி, செட்டிகுறிச்சியை சேர்ந்த கிராம மக்கள் நேற்று கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் முருகானந்தத்திடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
சிதம்பரம்பட்டி, செட்டிகுறிச்சி கிராமங்களில் உள்ள மக்களுக்கு விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இங்கு தென்னை, வாழை, மல்லிகைப்பூ, தேக்கு, பருத்தி, கம்பு, மக்காச்சோளம், எலுமிச்சை, கொய்யா, மா உள்ளிட்ட நீண்டகால பயிர்களையும், உளுந்து, பாசி, நிலக்கடலை போன்ற காலத்துக்கு ஏற்ற பயிர்களையும் பயிர் செய்து வருகிறோம்.
இந்நிலையில், செட்டிகுறிச்சியில் செயல்பட்டு வரும் 2 கல்குவாரிகளால், அதிலிருந்து வெளியேறும் துகள்கள் மற்றும் தூசிகளால் விவசாய நிலங்கள் பாழாகி வருகிறது. நீர்நிலைகளும் பாதிக்கப்பட்டு உள்ளன. மேலும், இப்பகுதியில் புதிதாக 2 கல்குவாரிகள் தொடங்குவதற்கான விண்ணப்பம் பரிசீலனையில் இருப்பதாக அறிகிறோம். எனவே, ஏற்கனவே இயங்கும் 2 கல்குவாரிகளை தடை செய்ய வேண்டும். புதிய குவாரிகளை எங்கள் விவசாய நிலங்களுக்கு அருகாமையில் அமைக்க அனுமதி அளிக்கக்கூடாது என வேண்டுகிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.