உள்ளாட்சி தேர்தலை அரசு நேர்மையாக நடத்த வேண்டும் ஜி.கே.வாசன் பேட்டி

உள்ளாட்சி தேர்தலை அரசு நேர்மையாக நடத்த வேண்டும் என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்

Update: 2021-09-06 13:16 GMT
நெல்லை:
தமிழக உள்ளாட்சித் தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும் என்று நெல்லையில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-
பள்ளி கட்டணம்
தமிழகத்தில் பள்ளிகளில் மாணவர்களிடம் இருந்து 85 சதவீதம் கல்வி கட்டணம் வசூலிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த கட்டணத்தை பெற்றோர் 3 தவணைகளாக செலுத்த அரசு உத்தரவிட வேண்டும். இதனை கல்வித்துறை அதிகாரிகள் கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டு இருப்பதை பெற்றோர் வரவேற்கின்றனர். ஆனால் ஒரு சில இடங்களில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு நிலவுவதால், வல்லுனர்கள் குழு கருத்துகளை கேட்டு அதற்கு ஏற்ற வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
ஸ்மார்ட் சிட்டி பணி
நெல்லை மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் தாமதமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். அடிக்கடி ஏற்படும் மின்தடையை தவிர்க்கும் வகையில் மின் வயர்களை பூமிக்கு அடியில் கேபிள் முறையில் பதிக்க வேண்டும். நெல்லை அருகே நாங்குநேரியில் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் புதிய தொழிற்சாலைகளை உருவாக்கி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் வறட்சியான பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் தாமிரபரணி, நம்பியாறு, கருமேனியாறு நதிநீர் இணைப்பு திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்.
தேர்தல் வாக்குறுதி
தமிழகத்தில் உள்ள திமுக அரசு தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். கல்விக் கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவி குழு கடன் தள்ளுபடி, நகை கடன் தள்ளுபடி போன்றவற்றை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
கொடநாடு விவகாரத்தில் சட்டரீதியான நடவடிக்கைகள் மட்டுமே மேற்கொள்ள வேண்டும். அதில் அரசுக்கு எந்த காழ்ப்புணர்ச்சியும் இருக்கக் கூடாது.
விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு கொரோனா நடைமுறைகள், கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கலாம்.
கூட்டணி தொடரும்
தமிழகத்தில் அதிமுக, பாரதீய ஜனதா கட்சியுடன் தற்போது தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணியில் உள்ளது. தமிழக உள்ளாட்சித் தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும்.
இதையொட்டி தமிழகத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் எந்தெந்த பகுதியில் போட்டியிடுவது, வெற்றி வாய்ப்பு குறித்து மாவட்ட வாரியாக சென்று ஆலோசனை நடத்தி வருகிறேன். தமிழகத்தில் மேற்கொண்டுள்ள வார்டு மறுவரையறை ஆளும் கட்சிக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தி விடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி நேர்மையாக தேர்தலை நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆலோசனை கூட்டம்
முன்னதாக நெல்லை வண்ணார்பேட்டை ஓட்டலில் தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நெல்லை மாவட்ட தமாகா நிர்வாகிகள் உடன் ஜி கே. வாசன் ஆலோசனை நடத்தினார். 

மேலும் செய்திகள்