பலத்த மழை: ஏற்காடு மலைப்பாதையில் மண்சரிவு- ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

பலத்த மழை காரணமாக ஏற்காடு மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2021-09-05 21:32 GMT
ஏற்காடு:
பலத்த மழை காரணமாக ஏற்காடு மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஏற்காட்டில் மழை
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் கடந்த 3 நாட்களாக விட்டு விட்டு மழை பெய்தது. அதிலும் குறிப்பாக நேற்று முன்தினம் சுமார் 127.6 மில்லி மீட்டர் மழை பதிவானது. நேற்றும் மதியம் 2 மணி அளவில் மிதமானது முதல் பலத்த மழை பெய்தது. தூறலாக தொடங்கிய மழை சுமார் 3 மணி நேரம் கொட்டி தீர்த்தது.
இந்த மழையால் ஏற்காட்டில் இருந்து குப்பனூர் செல்லும் மலைப்பாதையில் காக்காம்பாடி கிராமம் அருகில் சுமார் 100 மீட்டர் அளவிற்கு சாலையின் தடுப்பு சுவர் இடிந்து விழுந்ததுடன் அங்கு மண்சரிவும் ஏற்பட்டது.
போக்குவரத்து பாதிப்பு
இந்த மண்சரிவு காரணமாக ஏற்காடு-குப்பனூர் மலைப்பாதையில் நேற்று மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
பாதிப்புகளை பார்வையிட்ட பிறகு ஒரு பக்கமாக சாலையை சீரமைத்து வாகனங்கள் செல்ல நடவடிக்கை எடுத்தனர். மேலும் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மண்சரிவு ஏற்பட்ட பகுதியை பாதுகாப்பாக கடந்து செல்ல வாகன ஓட்டிகளுக்கு அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.

மேலும் செய்திகள்