பெங்களூருவில் தினமும் மெட்ரோ ரெயில்களில் பயணிப்போரின் எண்ணிக்கை 2 லட்சமாக அதிகரிப்பு
பெங்களூருவில் மெட்ரோ ரெயில்களில் பயணிப்போரின் எண்ணிக்கை 2 லட்சமாக உயர்ந்துள்ளது. நாயண்டஹள்ளி-கெங்கேரி இடையே தினமும் 15 ஆயிரம் போ் பயணம் செய்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெங்களூரு:
மெட்ரோ ரெயில்
பெங்களூருவில் மக்கள் தொகை பெருக்கம் மற்றும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக நகரில் எந்த சாலைக்கு சென்றாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். பெங்களூரு நகரில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் நாயண்டஹள்ளி மற்றும் பையப்பனஹள்ளி வரையும், நாகசந்திராவில் இருந்து அஞ்சனபுரா வரையும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
கடந்த மாதம் (ஆகஸ்டு) 29-ந் தேதியில் இருந்து நாயண்டஹள்ளியில் இருந்து கெங்கேரி வரை மெட்ரோ ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில், கொரோனாவுக்கு முன்பு வரை பெங்களூருவில் மெட்ரோ ரெயில்களில் தினமும் 4½ லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வந்தனர். ஆனால் கொரோனா பரவலுக்கு பின்பு மெட்ரோ ரெயில்களில் குறைந்த அளவே மக்கள் பயணம் செய்து வந்தனர். தினமும் 30 ஆயிரத்திற்கும் குறைவான நபர்களே பயணித்து வந்திருந்தனர்.
2 லட்சமாக உயர்வு
கடந்த 2 வாரங்களுக்கு முன்பாக கூட தினமும் ஒரு லட்சம் பேர் வரை தான் பயணம் செய்து வந்தார்கள். இந்த நிலையில், பெங்களூருவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதுடன், மெட்ரோ ரெயில்களில் பயணிப்போரின் மக்கள் எண்ணிக்கையும் கடந்த 2 வாரத்தில் அதிவேகமாக உயர்ந்துள்ளது.
அதாவது பெங்களூருவில் கடந்த ஆகஸ்டு 31-ந் தேதி அன்று ஒரு லட்சத்து 89 ஆயிரத்து 212 பேர் பயணம் செய்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து தினமும் 2 லட்சம் பேர் பயணம் செய்யும் அளவுக்கு அதிகரித்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
15 ஆயிரம் பேர் பயணம்
இவற்றில் கடந்த மாதம் 29-ந் தேதி தொடங்கப்பட்ட நாயண்டஹள்ளி-கெங்கேரி இடையிலான வழித்தடத்தில் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்ய மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதாகவும், அந்த வழித்தடத்தில் தினமும் 15 ஆயிரம் பயணம் செய்து வருவதாகவும் மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து பெங்களூருவில் இயல்பு நிலை திரும்பி இருப்பதாலும், மீண்டும் போக்குவரத்து நெரில் உண்டாகி வருவதாலும், பெட்ரோல் விலை உயர்வு காரணமாகவும், மெட்ரோ ரெயில்களில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.