கோபி அருகே நள்ளிரவில் பரபரப்பு சம்பவம் மில்லில் வேலை பார்த்த சிறுமி காரில் கடத்தல்; பாட்டி உள்பட 5 பேர் கைது

கோபி அருகே மில்லில் வேலை பார்த்த சிறுமியை காரில் கடத்திய பாட்டி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். ‘காவலன் செயலி’ மூலம் கிடைத்த தகவலால் கோபி போலீசார் 20 நிமிடத்தில் அதிரடி நடவடிக்கை எடுத்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Update: 2021-09-05 20:34 GMT
கடத்தூர்
கோபி அருகே மில்லில் வேலை பார்த்த சிறுமியை காரில் கடத்திய பாட்டி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். ‘காவலன் செயலி’ மூலம் கிடைத்த தகவலால் கோபி போலீசார் 20 நிமிடத்தில் அதிரடி நடவடிக்கை எடுத்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. 
‘காவலன் செயலி’
தமிழக போலீஸ் துறை சார்பில் ‘காவலன் செயலி (ஆப்)’ அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த செயலி மூலம் பெண்கள் யாராவது சிக்கலில் மாட்டிக்கொண்டாலோ? தங்களை யாராவது கிண்டல் அல்லது கேலி செய்தாலோ? பாலியல் துன்புறுத்தலுக்கு யாராவது உட்படுத்த நேரிட்டாலோ? பொது இடங்களில் வேறு ஏதேனும் பிரச்சினையில் சிக்கி கொண்டாலோ? அதுபற்றி தங்களுடைய ஸ்மார்ட் போனில் பதிவிறக்கம் செய்யப்பட்ட ‘காவலன் செயலியை’ ஆன் செய்தால் போதும். அதில் இருந்து அந்த போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக ரகசிய தகவல் சென்றுவிடும். சிக்கலில் மாட்டிக்கொண்ட பெண் தொடர்பு கொண்டு பேச வேண்டிய அவசியமே இல்லை. ரகசிய தகவல் கிடைத்தவுடன், அந்த ஸ்மார்ட் போன் உள்ள இடம் குறித்து சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள போலீசாருக்கு உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்து தகவல் கொடுக்கப்படும். இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட பகுதி போலீசார் விரைந்து செயல்பட்டு சிக்கலில் மாட்டிக்கொண்ட பெண்ணை உடனடியாக மீட்க துரிதகதியில் நடவடிக்கையில் இறங்குவார்கள். மேலும் இந்த ‘காவலன் செயலி’ குறித்து போலீஸ் துறை சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள், தொழிற்சாலைகளில் வேலை செய்யும் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டும் வந்தது. 
17 வயது சிறுமி
இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் கோபி அருகே சிக்கலில் மாட்டிக்கொண்ட 17 வயது சிறுமி, ‘காவலன் செயலி’ மூலம் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமியின் தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் அந்த சிறுமி தனது தாய் மற்றும் 70 வயது பாட்டியின் பராமரிப்பில் வாழ்ந்து வந்தார். 
திருமணம்
குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கோபி அருகே அரசூரில் உள்ள தனியார் மில்லில் தொழிலாளியாக அந்த சிறுமி வேலையில் சேர்ந்தார். கடந்த கொரோனா தொற்று பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக வீட்டுக்கு அந்த சிறுமி சென்றார். 
இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அந்த சிறுமிக்கும், திருவண்ணாமலை மாவட்டம் மெய்யூரை சேர்ந்த அண்ணாமலை (27) என்பவருக்கும்  திருமணம் செய்து வைக்கப்பட்டது. சிறுமி திருமணம் என்பதால் இதுபற்றி திருவண்ணாமலை மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்ததும் அதிகாரிகள் தண்டாரம்பட்டு போலீசார் உதவியுடன் அந்த சிறுமியை மீட்டு பாதுகாப்பு மையத்துக்கு அனுப்பி வைத்தனர். 
கட்டாயமாக...
இந்நிலையில் பாதுகாப்பு மையத்தில் இருந்த அந்த சிறுமியை, அவருடைய பாட்டி கடந்த மாதம் வீட்டுக்கு அழைத்து வந்தார். பின்னர் அந்த சிறுமியை மீண்டும் கோபி அருேக அரசூரில் ஏற்கனவே வேலை செய்த மில்லில் வேலைக்கு சேர்த்தார். அங்கு அந்த சிறுமி வேலை செய்து வந்து உள்ளார். 
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு அந்த மில்லுக்கு சிறுமியின் பாட்டி காரில் சென்று உள்ளார். தன்னுடன் சிறுமியை அனுப்பி வைக்குமாறு மில் நிர்வாகத்திடம் தெரிவித்தார். மில் நிர்வாகமும் சிறுமியை பாட்டியுடன் அனுப்பி வைத்தது. அப்போது சிறுமியின் பாட்டியுடன், அண்ணாமலை மற்றும் அவருடைய உறவினர்களான கவுரி (40), பஞ்சமூர்த்தி (34), பழனி (26) ஆகியோரும் வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர்களுடன் காரில் செல்ல அந்த சிறுமி விரும்பவில்லை.. இதனால் அவர்கள் அந்த சிறுமியை காரில் ஏற்றி அங்கிருந்து கடத்தி சென்றனர்.  
போலீசார் மீட்டனர்
இதில் இருந்து தப்பிக்க முடியாத சிறுமி நைசாக தன்னிடம் இருந்த போனில் உள்ள ‘காவலன் செயலி’ மூலமாக இதுபற்றிய தகவலை போலீஸ் துறைக்கு அனுப்பிவிட்டார். இதுபற்றிய தகவல் மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு சென்றது. உடனே போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கோபி போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போக்குவரத்து போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் மற்றும் போலீசார் சுதாரித்து கொண்டு போன் சிக்னல் மூலம் மற்றொரு காரில் சிறுமி சென்ற காரை பின்னாலேயே துரத்தி சென்றனர். கோபியை அடுத்த ஒத்தக்குதிரை அருகே அந்த சிறுமியின் காரை போலீசார் மடக்கி பிடித்து சிறுமியை மீட்டனர். 
போக்சோ சட்டத்தில்...
இதுகுறித்த புகாரின் பேரில் கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அண்ணாமலையை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்ததாக சிறுமியின் பாட்டி, அண்ணாமலையின் உறவினர்களான கவுரி, பஞ்சமூர்த்தி, பழனி ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். 
‘காவலன் செயலி’ மூலம் கிடைத்த தகவல் மூலம் 20 நிமிடத்துக்குள் காரில் கடத்தப்பட்ட அந்த சிறுமியை போலீசார் மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் கோபி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்