பழுதடைந்த நிழற்குடையால் பயணிகள் அவதி

சேரம்பாடி அருகே பழுதடைந்த நிழற்குடையால் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர். இதற்கு நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Update: 2021-09-05 18:23 GMT
பந்தலூர்

சேரம்பாடி அருகே பழுதடைந்த நிழற்குடையால் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர். இதற்கு நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

பயணிகள் நிழற்குடை

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட சேரம்பாடி அருகே பாலவாடி பகுதி உள்ளது. இங்கு ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அவசர மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக கூடலூர், பந்தலூர், எருமாடு போன்ற பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். 

மேலும் அங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ-மாணவிகள் சென்று வருகின்றனர். இதற்காக பஸ் ஏற பாலவாடி வளைவுக்கு வருகின்றனர். இதனால் அங்கு பயணிகள் நிழற்குடை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதை ஏற்று கூடலூர் ஒன்றியம், சேரங்கோடு ஊராட்சி ஆகியவை சார்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாலவாடி வளைவில் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது.

இடிந்து விழும் நிலை

ஆனால் தரமின்றி கட்டப்பட்டதால், நாளடைவில் அந்த கட்டிட சுவர்களில் வெடிப்பு ஏற்பட்டது. மேலும் தரையும், இருக்கையும் உடைந்தது. தற்போது மிகவும் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் பயணிகள் நிழற்குடை உள்ளது.

இதனால் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறிவிட்டது. இதன் காரணமாக பயணிகள் மழை மற்றும் வெளியில் திறந்தவெளியில் பஸ்சுக்காக காத்திருந்து அவதி அடைந்து வருகின்றனர்.

நடவடிக்கை 

இதுகுறித்து பாலவாடி பகுதி மக்கள் கூறியதாவது:- 
எங்கள் ஊருக்குள் சரிவர பஸ் வசதி கிடையாது. இதனால் பஸ்சில் ஏற பாலவாடி வளைவுக்கு வர வேண்டிய நிலை உள்ளது. அங்கு பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது கட்டிடம் மிகவும் பழுதடைந்து விட்டது. எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலைக்கு சென்றுவிட்டதால், அதனை பயன்படுத்த முடிவது இல்லை.

இதனால் பாதுகாப்பு கருதி அதற்குள் யாரும் செல்லாத வகையில் தடுப்பு கம்பிகள் வைத்து அடைத்து வைத்து உள்ளனர். இதனால் திறந்தவெளியில் பஸ்சுக்கு சாலையோரம் காத்து கிடக்கிறோம். எனவே அந்த கட்டிடத்தை இடித்துவிட்டு, புதிய நிழற்குடை அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்