வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது வழக்கு
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சூலூரில் பணிபுரிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.
கோவை
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சூலூரில் பணிபுரிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
லோக் ஆயுக்தா
கோவை மாவட்டம் சூலூரில் கடந்த 5.2.2018 முதல் 15.3.2020 வரை போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தவர் தங்கராஜூ. இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக பல்லடத்தை சேர்ந்த விவசாயி கந்தசாமி என்பவர் கடந்த 2020-ம் ஆண்டு லோக் ஆயுக்தா அமைப்பிற்கு புகார் மனு அனுப்பினார்.
இதன்பேரில் கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 4.2.2020-ம் ஆண்டு விசாரணை மேற்கொண்டனர். தங்கராஜூ கடந்த 2000-ம் ஆண்டு நேரடியாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக தேர்வு செய்யப்பட்டார்.
பின்னர் அவர் கடந்த 2014-ம் ஆண்டு போலீஸ் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்று அரக்கோனம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தார்.
தொடர்ந்து 1.6.2015 முதல் 2.11.2017 வரை பல்லடத்திலும், 5.2.2018 முதல் 15.3.2020 வரை சூலூரிலும் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தார். பின்னர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட அவர் தற்போது திண்டுக்கல் கண்ணிவாடி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக உள்ளார்.
சொத்துக்கள்
இவர் மீது கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திவ்யா மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்ஸ்பெக்டர் தங்கராஜூ மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இதில் அவர் கடந்த 1.1.2016 முதல் 31.12.2019 வரை வருமானத்திற்கு அதிகமாக ரூ.73 லட்சத்திற்கு சொத்து சேர்த்து உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.
மனைவி பூங்கொடி பெயரில் வீடு மற்றும் வங்கியில் பணம் வைத்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்த தங்கராஜூ மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் 13 (2), 13 (1) (இ) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.