கோவை
கொரோனா காரணமாக கோவை அருகே உள்ள கோவை குற்றாலம் சுற்றுலா மையம் மூடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அரசு வழிகாட்டுதலின்படி திங்கட்கிழமை முதல் இந்த சுற்றுலா மையம் திறக்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து கோவை குற்றால அருவியில் பராமரிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. அத்துடன் சுற்றுலா பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளன.
இதுகுறித்து மாவட்ட வன அதிகாரி அசோக்குமார் கூறியதாவது:-
கோவை குற்றாலத்துக்கு வரும் ஒவ்வொரு சுற்றுலா பயணிக்கும் நுழைவுக்கட்டணம் செலுத்தும் முன்பு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும். சுற்றுலா பயணிகள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வரவேண்டும்.
பிற மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் கொரோனா தொற்று இல்லை என்பதற்கான சான்று அல்லது 2 தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று வைத்திருக்க வேண்டும்.
சுற்றுலா பயணிகள் காலை 9 மணி முதல் நேரம் அடிப்படையில் அனுமதிக்கப்படுவார்கள். மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலின்படி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்பட்டு இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.