குன்னத்தூர் அருகே படிக்காத 44 வயதானவரை மகள் திருமணம் செய்ததால் மனமுடைந்த தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை

குன்னத்தூர் அருகே படிக்காத 44 வயதானவரை மகள் திருமணம் செய்ததால் மனமுடைந்த தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை

Update: 2021-09-05 16:15 GMT
குன்னத்தூர், 
குன்னத்தூர் அருகே படிக்காத 44 வயதானவரை மகள் திருமணம் செய்ததால் மனமுடைந்த தம்பதி தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றனர். ஆனால் அது தோல்வியில் முடிந்ததால் விஷ மாத்திரை தின்று தற்கொலை செய்து கொண்டனர். 
இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
 காதல்
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே உள்ள கம்மாள குட்டை கிராமம் பண்ணாரியம்மன் நகரைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி என்கிற பழனிச்சாமி (வயது 58). விவசாயி. இவரது மனைவி சுமதி (48).‌ இவர்களது மகள் ஜனனி (22). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பிசியோதெரபி மருத்துவப்படிப்பு இறுதியாண்டு படித்து வருகிறார். 
இந்த நிலையில் ஜனனியும் குன்னத்தூர் பகுதியில் கோழி இறைச்சி கடை நடத்தி வரும் 44 வயதானவரும் காதலித்து வந்தனர். மேலும் இவர் படிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
22 வயது வித்தியாசம் உள்ளவரை தனது மகள் காதலிக்கும் விவகாரம் ஜனனியின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதனால் அவர்கள் மகளை கண்டித்தனர். ஆனாலும் ஜனனி தனது காதலை கைவிடவில்லை. இதற்கிடையில் எங்கள் மகள் காதல் திருமணம் செய்து கொண்டால் நாங்கள் உயிரோடு இருக்க மாட்டோம் என்று பழனிச்சாமி-சுமதி தம்பதி தங்களது உறவினர்களிடம் கூறிவந்தனர். அப்போது உறவினர்கள் அப்படி எல்லாம் விபரீத முடிவை எடுக்கக் கூடாது என்று அறிவுரை கூறினார்கள். 
 தற்கொலை
இந்த நிலையில் கடந்த 2-ந்தேதி ஜனனி அவர் காதலித்த நபருடன் வீட்டை விட்டு வெளியேறி சென்று திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. அவர்கள் திருமண கோலத்தில் இருந்த புகைப்படம் செல்போனில் வந்ததை பார்த்து ஜனனியின் பெற்றோர் பெரிதும் அதிர்ச்சி அடைந்தனர். ஆசை ஆசையாய் வளர்த்த மகள் இப்படி செய்து விட்டாளே என்று மனவேதனை அடைந்துள்ளனர். 
இதற்கிடையில் தனது தயாருக்கு திதி சாமி கும்பிட 5-ந் தேதி (நேற்று) வந்து விடுங்கள் என்று உறவினர்களுக்கு பழனிச்சாமி ஏற்கனவே தெரிவித்துள்ளார். அதன்படி  பழனிச்சாமியின் தாயாருக்கு திதி சாமிகும்பிட  உறவினர்கள் நேற்று காலை பழனிச்சாமியின்  வீட்டிற்கு வந்தனர். அப்போது வீடு திறந்து கிடந்தது. இதனால் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். 
அப்போது வீட்டினுள் விரிக்கப்பட்டு இருந்த பாயில் பழனிச்சாமியும், அவருடைய மனைவி சுமதியும் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தனர். அவர்கள் அருகில் வாழைப்பழம் மற்றும் விஷ மாத்திரைகளும் கிடந்தன. மேலும் வீட்டின் கூரையில் கட்டப்பட்ட நிலையில் சுருக்கு முடிச்சு உள்ள கயிறு தொங்கிக்கொண்டிருந்தது. அதன் அருகில் ஸ்டுல் ஒன்றும் இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் இது குறித்து குன்னத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பிகா சம்பவம் நடந்த வீட்டிற்கு விரைந்து சென்று தம்பதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
போலீசார் விசாரணை
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் படிக்காத 44 வயது உடையவரை மகள் காதல் திருமணம் செய்ததால் மனம் உடைந்த தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை  செய்ய முயன்றுள்ளனர். ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்ததால் வாழைப்பழத்தில் விஷமாத்திரைகளை வைத்து தின்று தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். படிக்காத 44 வயதுடையவரை மகள்  காதல் திருமணம் செய்துகொண்டதால், பெற்றோர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்