வேலூர் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

வேலூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு கடை வைக்க விரும்புபவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Update: 2021-09-05 13:57 GMT
வேலூர்

வேலூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு கடை வைக்க விரும்புபவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தற்காலிக பட்டாசு கடை உரிமம்

வேலூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி தற்காலிக பட்டாசு கடைகள் அமைப்பதற்கான உரிமம் பெற்றிட ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. வருகிற 30-ந் தேதி வரை இ-சேவை மையங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளன.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது கடை அமைவிடத்துக்கான சாலைவசதி, கொள்ளளவு, சுற்றுப்புறங்களை குறிப்பிடும் வரைபடம், கட்டிடத்துக்கான புளுபிரிண்ட் வரைபடம் ஆகியவற்றின் 6 நகல்கள், கடை வைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள இடம் சொந்த இடமாக இருந்தால் அதற்கான ஆதாரம் அல்லது வாடகை கட்டிடமாக இருந்தால் வாடகை ஒப்பந்த பத்திரம், உரிமத்தை காட்டும் ஆவணம், உரிமத்துக்கான கட்டணம் ரூ.500 அரசுக்கணக்கில் செலுத்தியதற்கான அசல் ரசீது, இருப்பிடத்துக்கான ஆதாரம் (ஆதார்அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன்கார்டு), வரிரசீது, 2 புகைப்படம் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.

30-ந் தேதி கடைசிநாள்

ஆன்லைனில் பெறப்படும் விண்ணப்பங்கள் சம்மந்தப்பட்ட துறைகள் மூலம் விசாரணைக்கு உட்படுத்தப்படும். பின்னர் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்ற விவரம் ஆன்லைனில் தெரிவிக்கப்படும். விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டால் தற்காலிக கடை உரிமத்தின் ஆணை தீபாவளி பண்டிகைக்கு ஒருமாதத்துக்கு முன்பாக இ-சேவை மையம் மூலமாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கடைசிநாளான 30-ந்தேதிக்கு பின்னர் ஆன்லைனில் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. நிரந்தர பட்டாசு விற்பனை உரிமம் கோருவோர், ஆண்டுதோறும் உரிமம் புதுப்பித்தலுக்கு இந்த வழிமுறைகள் பொருந்தாது.
 இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்