ஐஸ்கிரீம் கடை உரிமையாளர் வீட்டில் லேப்டாப், ஐபேட் திருட்டு
வேலூரில் ஐஸ்கிரீம் உரிமையாளர் வீட்டின் கதவை உடைத்து லேப்டாப், ஐபேட் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வேலூர்
வேலூரில் ஐஸ்கிரீம் உரிமையாளர் வீட்டின் கதவை உடைத்து லேப்டாப், ஐபேட் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
லேப்டாப், ஐபேட் திருட்டு
வேலூர் வசந்தபுரம் ஸ்ரீசாய்நகரை சேர்ந்தவர் சாலமன் (வயது 36), ஐஸ்கிரீம் கடை உரிமையாளர். இவர் கடந்த 2-ந் தேதி இரவு சாய்நாதபுரத்தில் உள்ள தனது தந்தையின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அன்றிரவு அங்கு தங்கிய சாலமன் மறுநாள் மாலை வசந்தபுரத்தில் உள்ள வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவை உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
அதனால் அதிர்ச்சி அடைந்த அவர் படுக்கையறைக்கு சென்று பார்த்தார். அங்கு வைத்திருந்த லேப்டாப், ஐபேட் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்றிருந்தனர். இதுகுறித்து அவர் வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் நபுகார் அளித்தார்.
வாலிபர் கைது
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் அந்த வீட்டுக்கு சென்று பார்வையிட்டு சாலமன் மற்றும் அக்கம்,பக்கம் வீட்டில் வசிப்பவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அதில், சாலமன் ஐஸ்கிரீம் கடையில் முன்பு பணிபுரிந்த அதே பகுதியை சேர்ந்த அப்பு (30) என்பவர் வீட்டின் அருகே சுற்றித்திரிந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர்.
அதில், சாலமனை பார்க்க அவருடைய வீட்டிற்கு வந்ததும், வீட்டில் யாரும் இல்லாததால் பின்பக்க கதவை உடைத்து லேப்டாப், ஐபேட் ஆகியவற்றை திருடியதும் தெரிய வந்தது.
இதையடுத்து அப்புவை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து ரூ.70 ஆயிரம் மதிப்பிலான லேப்டாப், ஐபேட் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.