கிராம பஞ்சாயத்து பெண் ஊழியரை கற்பழித்த வாலிபர் கைது
கலபுரகியில், கிராம பஞ்சாயத்து பெண் ஊழியரை கற்பழித்த வாலிபர் 3 மாதங்களுக்கு பின்னர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
கலபுரகி:
பெண் கற்பழிப்பு
கலபுரகி மாவட்டம் சேடம் தாலுகா குருகுந்தா கிராமத்தை சேர்ந்தவர் 29 வயது பெண். இவர் குருகுந்தா அருகே உள்ள கிராமத்தில் செயல்பட்டு வரும் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் ஊழியராக ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகிறார். அந்த பெண் தினமும் பஸ்சில் வேலைக்கு சென்று வருவது வழக்கம். இந்த நிலையில் கடந்த மே மாதம் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்ததால், பஸ்கள் இயக்கப்படவில்லை.
இதனால் அந்த பெண் சாலையில் செல்லும் வாகனங்களில் லிப்ட் கேட்டு வேலைக்கு சென்று உள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த பெண் வேலைக்கு செல்ல வாகனத்தை எதிர்பார்த்து காத்து நின்றார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஒரு வாலிபர் வந்தார். அந்த வாலிபரிடம், பெண் லிப்ட் கேட்டு ஏறி சென்றார். ஆனால் அந்த பெண்ணை ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்று வாலிபர் கற்பழித்ததாக கூறப்படுகிறது. பின்னர் அந்த வாலிபர் தப்பி சென்று விட்டார்.
மகளிர் ஆணையத்தில் புகார்
இந்த நிலையில் வீடு திரும்பிய பெண் சம்பவம் குறித்து தனது கணவர் மற்றும் குடும்பத்தினரிடம் கூறாமல் இருந்து வந்து உள்ளார். இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் சம்பவம் குறித்து இணையதளம் மூலம் தேசிய மகளிர் ஆணையத்தில் அந்த பெண் புகார் அளித்து இருந்தார். அந்த புகாரை குருகுந்தா போலீஸ் நிலையத்திற்கு மகளிர் ஆணையத்தினர் அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து பெண்ணை அழைத்து போலீசார் விசாரித்தனர். ஆனால் கற்பழிப்பு குறித்து புகார் கொடுக்க அந்த பெண் தயக்கம் காட்டினார். இதையடுத்து அவருக்கு தைரியம் கூறிய போலீசார், உங்களது விவரம் பாதுகாக்கப்படும் என்று உறுதி அளித்தனர். பின்னர் அந்த பெண் கற்பழிப்பு சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்து இருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணை கற்பழித்த வாலிபரை தேடினர். மேலும் அந்த பெண்ணிடமும், வாலிபர் குறித்து விசாரித்தனர். ஆனால் அந்த பெண் அந்த வாலிபரை இதற்கு முன்பு பார்த்தது இல்லை. இதனால் அவரை பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று கூறி இருந்தார்.
வாலிபரின் படத்தை வரைந்த போலீசார்
மேலும் அந்த வாலிபரின் முகம் தனக்கு நன்றாக நியாபகம் உள்ளது என்று போலீசாரிடம், பெண் கூறி இருந்தார். இதையடுத்து பெண் கூறிய அடையாளங்களை வைத்து வாலிபரின் உருவப்படத்தை போலீசார் வரைந்து இருந்தனர். மேலும் சந்தேகத்தின்பேரில் 4 வாலிபர்களின் வாக்காளர் அடையாள அட்டையை வாங்கி போலீசார் அந்த பெண்ணிடம் கொடுத்தனர். அப்போது ஒரு வாக்காளர் அடையாள அட்டையில் இருந்த வாலிபர் தான் தன்னை கற்பழித்ததாக போலீசாரிடம் பெண் கூறினார்.
இதையடுத்து அந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் குடிபோதையில் பெண்ணை கற்பழித்ததை ஒப்புக்கொண்டார். அந்த வாலிபரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்டு வாலிபரை கைது செய்த குருகுந்தா போலீசாருக்கு கலபுரகி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிமி மரியம் ஜார்ஜ் பாராட்டு தெரிவித்து உள்ளார்.