கியாஸ் சிலிண்டருக்கு பாடை கட்டி ஒப்பாரி வைத்து பெண்கள் போராட்டம்

விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கியாஸ் சிலிண்டருக்கு பாடை கட்டி ஒப்பாரி வைத்து பெண்கள் போராட்டம் நடத்தினார்கள்.

Update: 2021-09-04 20:51 GMT
விருதுநகர்,
விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கியாஸ் சிலிண்டருக்கு பாடை கட்டி ஒப்பாரி வைத்து பெண்கள் போராட்டம் நடத்தினார்கள்.

கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு

மத்திய அரசு ஏழை, எளிய மக்களுக்கு ஒருபுறம் இலவசமாக கியாஸ் சிலிண்டர் வழங்கி வரும் நிலையில் மறுபுறம் சிலிண்டர் விலை யினை தொடர்ந்து உயர்த்தி வருகிறது. ஒரு வருடத்தில் ரூபாய் 285 விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சாதாரண, நடுத்தர வர்க்க மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மானியமும் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.
கியாஸ் சிலிண்டர் உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன. அதோடு பல்வேறு தரப்பினரும் விலை உயர்வை வாபஸ் பெறக்கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பாடை கட்டி போராட்டம்

இந்த நிலையில் விருதுநகரில் நேற்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் நூதன முறையில் தங்கள் எதிர்ப்பினை தெரிவித்தனர். விருதுநகர் நகர ஜனநாயக மாதர் சங்கத் தலைவி ராஜேஸ்வரி தலைமையில் கியாஸ் சிலிண்டரை பாடை கட்டி நகராட்சி காலனியில் இருந்து ஊர்வலமாக பெண்கள் எடுத்து சென்றனர்.
விருதுநகர் புல்லலக்கோட்டை சந்திப்பில் வைத்து ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர்.இதில் ஜனநாயக மாதர் சங்க மாநில செயலாளர் லட்சுமி, மாவட்ட தலைவர் உமா மகேஸ்வரி, மாவட்ட செயலாளர் தெய்வானை மற்றும் சங்க உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்