ஆக்கிரமிப்பை அகற்ற வியாபாரிகள் எதிர்ப்பு- சாலை மறியல்
பாளையங்கோட்டையில் ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நெல்லை:
பாளையங்கோட்டையில் ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆக்கிரமிப்பு
நெல்லை மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஒரு பகுதியாக போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக பிரதான சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு கூடுதல் விளக்குகளும் போடப்பட்டு வருகிறது. சாலையின் மைய பகுதியில் சென்டர் மீடியன் அமைக்கப்படுகின்றன. சமீபத்தில் பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் இருந்து கோர்ட்டு வரை சாலை விரிவாக்கத்திற்காக இந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது.
இதற்காக நேற்று நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சேகர், மாநகராட்சி உதவி ஆணையாளர் ஜஹாங்கீர், மாநகர உதவி போலீஸ் கமிஷனர் நாகசங்கர் ஆகியோர் முன்னிலையில் நெடுஞ்சாலை துறை மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் பாளையங்கோட்டை சமாதானபுரம் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்ற முயன்றனர்.
வியாபாரிகள் மறியல்
உடனே அந்த பகுதி வியாபாரிகள், சங்கத்தலைவர் கார்டன் சேகர் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், எங்களுக்கு எந்தவித கால அவகாசம் இல்லாமல் ஆக்கிரமிப்பை அகற்ற கூறுவது சரியானது அல்ல. பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் இருந்து ஆக்கிரமிப்பை அகற்றும் பணியை தொடங்க வேண்டும் என்று கூறினார்கள். அவர்களிடம் போலீஸ் உதவி கமிஷனர் நாகசங்கர் நடத்திய பேச்சுவார்த்தையில், வியாபாரிகளுக்கு உரிய கால அவகாசம் கொடுத்து வருகிற 8-ந் தேதி முதல் அந்த பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து வியாபாரிகள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.