ராசிபுரம் அருகே பரபரப்பு; பிளஸ்-1 ஆன்லைன் வகுப்பில் ஆபாச படம்-அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியரிடம் விசாரணை

ராசிபுரம் அருகே ஆன்லைன் வகுப்பில் ஆபாச படம் வெளியானது. இதுகுறித்து அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2021-09-04 18:25 GMT
ராசிபுரம்:
ஆன்லைன் வகுப்பில் ஆபாச படம்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே வடுகம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் இயற்பியல் ஆசிரியராகவும், உதவி தலைமை ஆசிரியராகவும் பச்சுடையாம்பாளையம் பகுதியை சேர்ந்த எடின்பரோ (வயது 54) என்பவர் வேலைப் பார்த்து வருகிறார்.
இவர் கடந்த வியாழக்கிழமை மாலை 3 மணிக்கு பள்ளி மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்தினார். இதில் கணித அறிவியல், கணித உயிரியல் பாடப்பிரிவை சேர்ந்த பிளஸ்-1 மாணவிகள் 21 பேர் பங்கேற்றனர். அப்போது திடீரென அரைகுறை ஆடையுடன் ஆபாச படம் வெளியானதாக கூறப்படுகிறது.
அதிகாரிகள் விசாரணை
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர். இதுகுறித்து நாமகிரிப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு ஆன்லைன் மூலம் புகார் அனுப்பப்பட்டது. மேலும் கல்வித்துறை அதிகாரிகளுக்கும் புகார் சென்றது. 
இதையடுத்து நாமக்கல் மாவட்ட கல்வி அதிகாரி பாலசுப்பிரமணியம், ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் தமிழ்மணி, நாமகிரிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் மற்றும் போலீசார் அந்த பள்ளிக்கு நேரில் சென்றனர். பின்னர் ஆபாச படம் வெளியானது குறித்து அவர்கள் உதவி தலைமை ஆசிரியர் எடின்பரோ மற்றும் மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். 
வெளியானது எப்படி?
விசாரணை முடிவில் தான் ஆன்லைன் வகுப்பில் ஆபாச படம் வெளியானது எப்படி? என்பது தெரியவரும் என்றும், விசாரணை அறிக்கை மாவட்ட கலெக்டருக்கு அனுப்பப்படும் என்றும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்பின்னர் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். 
ஆன்லைன் வகுப்பில் ஆபாச படம் வெளியான சம்பவம் ராசிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்