சிறுமி குளிப்பதை படம் எடுத்து மிரட்டல்: போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் திடீர் சாவு-மாஜிஸ்திரேட்டு நேரில் விசாரணை

சிறுமி குளிப்பதை படம் எடுத்து மிரட்டிய வழக்கில் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் திடீரென இறந்தார். இதுகுறித்து நாமக்கல் மாஜிஸ்திரேட்டு நேரில் விசாரணை நடத்தினார்.

Update: 2021-09-04 18:24 GMT
பரமத்திவேலூர்:
சிறுமியை படம் எடுத்து மிரட்டல்
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள பாண்டமங்கலத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 42). இவர் கடந்த மாதம் 16 வயது சிறுமி ஒருவர் குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பரமத்திவேலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். 
இதை அறிந்த மணிகண்டன் தலைமறைவானார். அவரை போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் மணிகண்டன் பாண்டமங்கலத்தில் உள்ள அவருடைய வீட்டில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அவருடைய வீட்டுக்கு சென்றனர். அங்கு மணிகண்டன் வீட்டை முன்பக்கமாக பூட்டி விட்டு, வீட்டுக்குள் இருந்தது தெரிந்தது.
சாவு
இதையடுத்து போலீசார் அவரை பிடித்து, விசாரணைக்காக வாகனத்தில் ஏற்றி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது மணிகண்டன் உடல் சோர்வாக இருப்பதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் அவரை பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். 
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவருடைய உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மேல் சிகிச்சைக்கு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லுமாறும் அறிவுறுத்தினர். இதையடுத்து அவர் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மணிகண்டன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். பின்னர் அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.
மாஜிஸ்திரேட்டு விசாரணை
இந்தநிலையில் மணிகண்டன் மர்மமாக இறந்தது குறித்து நாமக்கல் முதலாவது குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு ஜெயந்தி விசாரணை நடத்துவதற்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். பின்னர் அவர் மணிகண்டனை விசாரணைக்காக அழைத்து வந்த போலீசார் மற்றும் பரிசோதனை செய்த டாக்டர்களிடம் விசாரணை நடத்தினார். தொடர்ந்து அவரது முன்னிலையில் மணிகண்டன் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்து சென்றபோது மணிகண்டன் இறந்தது குறித்து பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாரணவீரன் விசாரணை நடத்தி வருகிறார். மேலும் நாமக்கல் போலீசாரும் மர்ம சாவு என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்