பெட்ரோல்-டீசல், சமையல் எரிவாயு விலையேற்றம் மக்களுக்கு பெரும் சுமை ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு
பெட்ரோல்-டீசல், சமையல் எரிவாயு விலையேற்றம் மக்களுக்கு பெரும் சுமை என்று விழுப்புரத்தில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
விழுப்புரம்,
உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்ட தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் பங்கேற்ற கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சட்டசபையில் தி.மு.க. அரசு அறிவிக்கும் அறிவிப்புகள் மக்களை சென்றடையக்கூடிய உண்மையான அறிவிப்புகளாக இருக்க வேண்டும். குறிப்பாக தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டவற்றை ஒரு காலக்கெடுவிற்குள் நிறைவேற்ற வேண்டும். கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் மக்கள் நலத்திட்டங்கள் தொடர இந்த அரசு உறுதி செய்ய வேண்டும்.
விலையை குறைக்க வேண்டும்
விவசாயிகளின் வருங்கால வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் நிலையில் மத்திய அரசு, வேளாண் மசோதாவை கொண்டு வந்துள்ளது. இத்திட்டத்தில் உள்ள சந்தேகம், அச்சம் குறித்து விவசாய சங்கங்கள் மத்திய அரசுடன் பேசி தெளிவுபெற வேண்டும்.
மாறாக எதிர்க்கட்சிகள், இதில் அரசியலை புகுத்தி விவசாயிகளுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகளை கிடைக்கவிடாமல் நாளுக்கு நாள் நகர்த்தி கொண்டு வருகின்றனர்.
பெட்ரோல்-டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையேற்றம் அனைத்து தரப்பு மக்களுக்கும் பெரும் சுமை. இவற்றின் விலையை குறைக்கக்கூடிய நிலையை மத்திய அரசு எடுக்க வேண்டும், மாநில அரசும் அதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.
உள்ளாட்சி தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும். இருப்பினும் கொரோனா 3-வது அலை தாக்கத்தை பொறுத்து உள்ளாட்சி தேர்தலை எப்போது நடத்துவது என்பதை மாநில அரசு முடிவு செய்ய வேண்டும்.
உள்ளாட்சி தேர்தல் முக்கியம் என்றாலும், பொதுமக்களின் பாதுகாப்பையும் கவனத்தில் கொண்டு அரசு முடிவு எடுக்க வேண்டும். கோடநாடு வழக்கை பொறுத்தவரை சட்டம் தனது கடமையை செய்யும் என்று ஒருபுறம் சொன்னாலும் கூட மறுபுறம் இதன் ஆரம்பமே ஏதோ அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணம் என்ற எண்ணம் மக்களிடம் வந்திருக்கிறது.
அரசின் நிலைப்பாடு ஆக்கப்பூர்வமான செயல்பாடாகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், மக்களின் வளர்ச்சிக்காகவும் இருக்க வேண்டுமே தவிர அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இருக்கக்கூடாது.
பா.ஜ.க.வை ஆதரிக்கிறோம்
த.மா.கா.வை பொறுத்தவரை நாங்கள் அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் தொடர்ந்து இருக்கிறோம், மத்தியில் பா.ஜ.க.வை ஆதரிக்கிறோம். 3-வது அணிக்கான வாய்ப்பு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.