நீர் பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை கோமுகி அணையின் நீர்மட்டம் 31 அடியாக உயர்வு

நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள கோமுகி அணையின் நீர்மட்டம் 31 அடியாக உயர்ந்துள்ளது

Update: 2021-09-04 16:28 GMT
கச்சிராயப்பாளையம்

கோமுகி அணை

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அடிவாரத்தில் கோமுகி அணை உள்ளது. இந்த கோமுகி அணையின் மொத்த நீர்மட்டம் 46 அடியாகும். ஆனால் அணையின் பாதுகாப்பு கருதி 44 அடி வரை தண்ணீர் சேமித்து வைத்து ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் வாரத்தில் தண்ணீர் திறக்கப்படும்.  இதன் மூலம் கல்வராயன்மலை அடிவாரம் மற்றும் அதை சுற்றியுள்ள 11 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் முதல் வாரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டு இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை பழைய மற்றும் புதிய பாசன வாய்க்கால் வழியாக விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அதன்பிறகு அணையின் நீர்மட்டம் 25 அடியாக குறைந்ததும் மீன்வளர்ப்புக்காக தண்ணீர் திறப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. 

நீர் பிடிப்பு பகுதிகளில் மழை

இந்த நிலையில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெப்பசலனம் காரணமாக கடந்த ஒரு வார காலமாக கல்வராயன்மலை நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக கல்படை, பொட்டியம் ஆகிய ஆறுகளின் வழியாக அணைக்கு வினாடிக்கு 400 கன அடி வரை தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் 25 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் கடந்த ஒரு வாரத்தில் 6 அடி உயர்ந்து தற்போது 31 அடியாக உள்ளது. 
தொடர்ந்து வினாடிக்கு 100 கன அடி வரை தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் அணையின் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்பு உள்ளது.

மேலும் செய்திகள்