திருப்பூர் ரெயில் நிலையத்தில் வடமாநில தொழிலாளர்களுக்கு நேற்று கட்டாய கொரோனா தடுப்பூசி
திருப்பூர் ரெயில் நிலையத்தில் வடமாநில தொழிலாளர்களுக்கு நேற்று கட்டாய கொரோனா தடுப்பூசி
திருப்பூர்
திருப்பூர் ரெயில் நிலையத்தில் வடமாநில தொழிலாளர்களுக்கு நேற்று கட்டாய கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
வடமாநில தொழிலாளர்கள்
திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் அனைத்து பகுதிகளிலும் நடத்தப்பட்டு வருகிறது. 100 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தும் வகையில் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. தொழில் நகரான திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் பணியாற்ற வெளிமாநில தொழிலாளர்கள் அதிகம் திருப்பூர் நோக்கி வருகிறார்கள். ரெயில்கள் மூலமாக திருப்பூர் வரும் தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.
அதன்படி நேற்று திருப்பூர் ரெயில் நிலையத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது. குறிப்பாக வடமாநில தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதற்காக மருத்துவ குழுவினர் அங்கு நியமிக்கப்பட்டு பணிகளை மேற்கொண்டனர். வடமாநில தொழிலாளர்களிடம் விசாரணை மேற்கொண்டு அவர்களுக்கு கட்டாயமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. மருத்துவ காரணங்கள் இருந்தால் மட்டுமே தடுப்பூசி செலுத்தாமல் அனுமதிக்கப்பட்டனர். மற்றபடி வடமாநில தொழிலாளர்களிடம் விசாரணை மேற்கொண்டு உரிய வழிகாட்டுதலின்படி கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
3,21,741 பேருக்கு தடுப்பூசி
இந்த முகாமை திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
திருப்பூர் மாநகரில் தினமும் 34 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்து வருகிறது. தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. தினமும் ரெயில்கள் மூலமாக பிறமாநிலங்களில் இருந்து சராசரியாக 500 தொழிலாளர்கள் திருப்பூர் வருகிறார்கள். குறிப்பிட்ட நாட்களில் 1,500 பேர் வருகிறார்கள். இதுவரை 30 ஆயிரம் வெளிமாநில தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நோய்தொற்று அறிகுறி இருந்தால் அவர்களை உடனடியாக சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
திருப்பூர் மாநகர பகுதியில் இதுவரை 3 லட்சத்து 21 ஆயிரத்து 741 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 1 லட்சத்து 60 ஆயிரம் தொழிலாளர்களுக்கும், 1,055 மாற்றுத்திறனாளிகளுக்கும், 2,308 கர்ப்பிணிகளுக்கும், 2,514 பாலூட்டும் தாய்மார்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
காய்ச்சல் முகாம்
சிறப்பு முகாம்களில் 23 மருத்துவ அலுவலர்கள், 155 செவிலியர்கள், 170 இதர பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுவரை 24 ஆயிரத்து 202 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளது. இதில் 1,643 பேருக்கு காய்ச்சல் கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். போதுமான தடுப்பூசிகள் பெறப்பட்டுள்ளது. 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது உதவி ஆணையாளர் கண்ணன், டாக்டர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.