குடியாத்தம்
குடியாத்தம் அருகே வளத்தூர் ஏரி நிரம்பியது
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள வளத்தூர் ஏரி சுமார் 34 ஏக்கர் பரப்பளவு கொண்டது. பாலாற்றில் வெள்ளம் செல்லும்போது கால்வாய் வழியாக வளத்தூர் ஏரிக்கு தண்ணீர் வரும்.
மேல்பட்டி ெரயில்வே மேம்பாலம் அருகே செல்லும் பாலாற்றில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவிற்கு ஏரி கால்வாய் மூலம் வளத்தூர் ஏரிக்கு தண்ணீர் வரும்.
கடந்த மாதம் பெய்த மழையால் பாலாற்றில் வெள்ளம் சென்றதால் வளத்தூர் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள், கிராமமக்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் பாலாற்றிலிருந்து வளத்தூர் ஏரிக்கு வரும் கால்வாயை சீர் செய்தனர்.
இதனால் கடந்த 29-ந் தேதியில் இருந்து வளத்தூர் ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இன்று காலை வளத்தூர் ஏரி நிரம்பியது.
வளத்தூர் ஏரி நிரம்பி வழிந்ததும் கிராம மக்கள், விவசாயிகள் குடும்பத்துடன் சென்று பார்த்து மகிழ்ந்தனர். மேலும் ஏரி நிரம்பியதையொட்டி கிராம மக்கள் பூஜைகள் செய்து வழிபட்டனர்.