ஊருக்குள் புகுந்த காட்டுயானையால் பரபரப்பு
ஊருக்குள் புகுந்த காட்டுயானையால் பரபரப்பு
பந்தலூர்
பந்தலூர் அருகே சின்கோனா அரசு தேயிலை தோட்டத்தில் கடந்த 2 நாட்களாக ஒரு காட்டுயானை முகாமிட்டு உள்ளது. அந்த யானை இரவு நேரங்களில் தொழிலாளர்களின் குடியிருப்புகளை முற்றுகையிடுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு ஊருக்குள் புகுந்த அந்த யானை, அங்குள்ள நடைபாதையில் உலா வந்தது.
இதை கண்ட தொழிலாளர்கள் குடியிருப்புகளுக்குள் சென்று பதுங்கி கொண்டனர். பின்னர் ஒரு வீட்டின் வாசலை காட்டுயானை சேதப்படுத்தியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சேரம்பாடி வனத்துறையினர் காட்டுயானையை விரட்டியடித்தனர்.
அங்கிருந்து சென்ற காட்டுயானை சேரங்கோடு அரசு தேயிலை தோட்ட(ரேஞ்ச்-2) திருவள்ளுவர் நகரில் குடியிருப்புகளை முற்றுகையிட்டது. தொடர்ந்து மீண்டும் சின்கோனா பகுதிக்கு திரும்பியது. அதனை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
இதேபோன்று கூடலூர் துப்புக்குட்டிபேட்டை பகுதியில் பயிரிட்டு இருந்த வாழைகளை நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு காட்டுயானைகள் சேதப்படுத்தியது. மேலும் கார்கள் விற்பனை மைய சுற்றுச்சுவரை உடைத்தது. அங்கு அமைக்கப்பட்டு இருந்த கூடாரத்தின் மேற்கூரகளை சேதப்படுத்தியது.