நில உரிமையாளருக்கு ரூ.5 லட்சம் அபராதம்
கட்டுமான பணியின்போது மண்சரிவு ஏற்பட்ட விவகாரத்தில் நில உரிமையாளருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
குன்னூர்
கட்டுமான பணியின்போது மண்சரிவு ஏற்பட்ட விவகாரத்தில் நில உரிமையாளருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
மண்சரிவால் தடுப்புச்சுவர் இடிந்தது
குன்னூர் மவுண்ட் ரோட்டில் இருந்து அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் நடைபாதைக்கு அருகில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்றது. இங்கு கடந்த 29-ந் தேதி திடீரென ஏற்பட்ட மண்சரிவில் 2 தொழிலாளர்கள் சிக்கினர்.
உடனே காயத்துடன் மீட்கப்பட்டு, அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இது தொடர்பாக நில உரிமையாளர் யோகேஷ் கண்ணன் மீது 2 பிரிவுகளின் கீழ் குன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.
எனினும் அங்கு கட்டுமான பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. பின்னர் 1-ந் தேதி மீண்டும் மண்சரிவு ஏற்பட்டது. அதில் தடுப்புச்சுவர் இடிந்ததோடு கட்டிடங்கள் அந்தரத்தில் தொங்கின. மேலும் மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் ஆஸ்பத்திரியில் மின்தடை ஏற்பட்டதால், நோயாளிகள் அவதி அடைந்தனர்.
ரூ.5 லட்சம் அபராதம்
இதை அறிந்த குன்னூர் சப்-கலெக்டர் தீபனா விஸ்வேஷ்வரி மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது மாவட்ட கலெக்டரின் அனுமதி ஆணையில் உள்ள நடைமுறைகள் சரிவர பின்பற்றப்படாமல் பணி மேற்கொள்ளப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து யோகேஷ் கண்ணனுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அரசுக்கு சொந்தமான ஆஸ்பத்திரிக்கு சேதம் விளைவித்ததால் அவர் மீது குன்னூர் நகர போலீஸ் நிலையத்தில் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.