கனரக வாகனங்களால் போக்குவரத்திற்கு இடையூறு

திருவாரூர் ரெயில்வே மேம்பாலத்தில் நிறுத்தப்படும் கனரக வாகனங்களால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

Update: 2021-09-03 18:01 GMT
திருவாரூர்:
திருவாரூர் ரெயில்வே மேம்பாலத்தில் நிறுத்தப்படும் கனரக வாகனங்களால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். 
ரெயில்வே மேம்பாலம் 
திருவாரூர் நகரில் உள்ள ரெயில்வே மேம்பாலம் தஞ்சை-நாகை சாலையை இணைக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த சாலையில் இருந்து திருவாரூர் நகருக்குள் செல்லும் பிரதான சாலை செல்வதால் 3 வழி பாதையாக இருந்து வருகிறது. இதில் தஞ்சை-நாகை சாலை என்பது தேசிய நெடுஞ்சாலை என்பதால் அதிக வாகனங்கள் எந்த நேரமும் செல்வது வழக்கம். இதனால் அடிக்கடி வாகன போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் நிலை இருந்து வருகிறது.
விபத்து ஏற்படும் அபாயம்
இந்த ரெயில்வே மேம்பாலத்தில் தஞ்சை செல்லும் சாலையில் கிரேன், லாரி உள்பட கனரக வாகனங்கள் தொடர்ந்து நிறுத்தப்பட்டு வருகிறது. இதனால் இரு வாகனங்கள் எதிரே, எதிரே கடந்து செல்லும் போது சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் நடந்து செல்பவர்கள், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மிகுந்த நெருக்கடிக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திருவாரூர் ரெயில்வே மேம்பாலம் தஞ்சை சாலை இருபுறங்களில் கனரக வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்