பலத்த காற்றுடன் கொட்டிய மழை
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த காற்றுடன் கொட்டிதீர்த்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த காற்றுடன் கொட்டிதீர்த்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பலத்த காற்று
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 9 மாவட்டங்களில் வருகிற 6-ந் தேதி வரை பலத்த காற்றுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் பல இடங்களில் கனமழை பெய்தது. பலத்த காற்றுடன் ராமநாதபுரத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டியது. பலத்த காற்றுடனும் மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி நிலவியது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த மாதம் இதேபோன்று பலத்த மழை பெய்த நிலையில் மீண்டும் நல்ல மழை கொட்டி தீர்த்தது. 2 மணி நேரம் வரை விட்டுவிட்டு பலத்த மழை பெய்தது. ராமநாதபுரம் மட்டுமல்லாமல் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இந்த மழை பெய்தது.
மேலடுக்கு சுழற்சி
வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்னரே வெப்பச்சலனம் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நல்ல மழை பெய்யத்தொடங்கி உள்ளதால் இந்த ஆண்டு பருவமழை நன்றாக பெய்யும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. கொட்டி தீர்த்த இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைவெள்ளம் தேங்கி நின்றது. ராமேசுவரத்தில் பெய்த மழையால் அப்துல்கலாம் மணிமண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது.
பல நீர்நிலைகளில் குறிப்பிடத்தக்க தண்ணீர் சேரத்தொடங்கி உள்ளது. பலத்த மழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் குறிப்பாக ராமநாதபுரம் நகரில் வெப்ப சலன நிலை மாறி குளிர்ச்சி நிலவியதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சி அடைந்தனர்.