பொது இடங்களில் சிலைகள் வைக்க கூடாது
விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்களில் சிலைகளை வைக்க கூடாது என்று ஆலோசனை கூட்டத்தில் சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் உத்தரவிட்டு உள்ளார்.
பொள்ளாச்சி
விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்களில் சிலைகளை வைக்க கூடாது என்று ஆலோசனை கூட்டத்தில் சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் உத்தரவிட்டு உள்ளார்.
ஆலோசனை கூட்டம்
பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தற்போது உள்ள கொரோனா பரவல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு மத சார்பான ஊர்வலங்கள், திருவிழாக்கள் நடத்த தடை உள்ளது. மேலும் பொது இடங்களில் உறியடி உள்ளிட்ட விளையாட்டுக்கள் நடத்துவதற்கும் தடை விதிக்கப்படுகிறது.
சிலைகள் வைக்க தடை
விநாயகர் சதுர்த்தி விழா குறித்து பொது இடங்களில் சிலைகளை நிறுவுவது அல்லது பொது இடங்களில் விழா கொண்டாடுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
இதேபோன்று சிலைகளை ஊர்வல மாக எடுத்து செல்வதற்கும், நீர்நிலைகளில் சிலைகளை கரைப்பதற்கும் அனுமதி இல்லை.
எனவே பொதுமக்கள் வீடுகளிலேயே பண்டிகையை கொண்டாட வேண்டும்.
விநாயகர் சதுர்த்தி விழாவை தனி நபர்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடலாம். மேலும் தனி நபர்களாக சென்று நீர்நிலைகளில் சிலைகளை கரைப்பதற்கும் அனுமதிக்கப்படுகிறது.
கடும் நடவடிக்கை
தனி நபர்கள் தங்களது இல்லங்களில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட சிலைகளை கோவில்களின் வெளிப்புறத்திலோ, சுற்றுப்புறத்திலோ வைத்து செல்வதற்கு அனுமதி அளிக்கப் படுகிறது.
இந்த சிலைகளை அகற்ற இந்து சமய அறநிலையத்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தற்போது நடைமுறையில் உள்ள சமூக இடைவெளியினை கடைப்பிடித்தல் மற்றும் இதர கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த கட்டுப்பாடுகளை மீறும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் தணிகவேல், போலீஸ் துணை சூப்பிரண்டுகள் சீனிவாசன், தமிழ்மணி மற்றும் போலீசார், அதிகாரிகள், இந்து அமைப்பினர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.