விழுப்புரம் மாவட்டத்தில் 6 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் நிலம் கையகப்படுத்தும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் கூடுதல் இயக்குனர் கலைச்செல்வி மோகன் உத்தரவு
விழுப்புரம் மாவட்டத்தில் 6 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் நிலம் கையகப்படுத்தும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று நில அளவைத்துறை கூடுதல் இயக்குனர் கலைச்செல்வி மோகன் உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் நில அளவை மற்றும் பட்டா மாற்றம் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை கூடுதல் இயக்குனர் கலைச்செல்வி மோகன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் டி.மோகன் முன்னிலை வகித்தார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், நில அளவை உதவி இயக்குனர் மணிவண்ணன், விழுப்புரம் கோட்டாட்சியர் அரிதாஸ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மோகன் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
விரைந்து முடிக்க உத்தரவு
கூட்டத்தில், விக்கிரவாண்டி- தஞ்சாவூர் நான்கு வழிச்சாலை பணி, திண்டிவனம்- நகரி ரெயில்வே பாதை பணி, விழுப்புரம்- திண்டுக்கல் இருவழி ரெயில்வே பாதை பணி, திண்டிவனம் சிப்காட் பணி என நெடுஞ்சாலை மற்றும் ரெயில்வே பாதை பணிகளுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நிலம் கையகப்படுத்தும் பணிகளின் முன்னேற்றம் குறித்து நில அளவைத்துறை கூடுதல் இயக்குனர் கலைச்செல்வி மோகன் கேட்டறிந்தார்.
அப்போது விழுப்புரம் மாவட்டத்தில் நெடுஞ்சாலை மற்றும் ரெயில்வே பாதை, சிப்காட் ஆகியவற்றுக்கு அரசு நிலம் கையகப்படுத்துவதில் வருவாய்த்துறையினர் மெத்தனமாக இருப்பதை அறிந்த அவர், அதற்கான காரணத்தை கேட்டு சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
மேலும் கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து 6 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் நிலம் கையகப்படுத்தும் பணிகளை துரிதப்படுத்தி அப்பணிகளை விரைந்து முடிக்கும்படி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.