நன்னடத்தையை மீறிய சாராய வியாபாரி ஓராண்டு சிறையில் அடைப்பு கோட்டாட்சியர் உத்தரவு
கள்ளக்குறிச்சி அருகே நன்னடத்தை பிணையை மீறிய சாராய வியாபாரியை ஓராண்டு சிறையில் அடைக்க கோட்டாட்சியர் உத்தரவிட்டார்
கள்ளக்குறிச்சி
சாராயம் விற்பனை
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தாலுகா சேஷசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த பெரியசாமி மகன் ராஜா(வயது 34) என்பவர் தொடர்ந்து கச்சிராயப்பாளையம், சின்னசேலம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் சாராய தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
கடந்த மாதம் 15-ந் தேதி வரஞ்சரம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட மலைக்கோட்டாலம் பகுதியில் சாராயம் விற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயமணி மற்றும் தனபால் ஆகியோர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சாராயத்தின் உரிமையாளர் ராஜா என்பவர் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.
ஓராண்டு சிறை
மேலும் ராஜா மீது சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் மதுவிலக்கு குற்றாவளிகள் சரித்திரப் பதிவேடு பதியப்பட்டு நன்னடத்தை பிணையம் அமலில் இருந்து வரும் நிலையில் அவர் மீண்டும் சாராய தொழிலில் ஈடுபட்டு வந்ததால் தலைமறைவாக இருந்த ராஜாவை சங்கராபுரம் போலீசார் கைது செய்து செஞ்சி கிளை சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் ராஜா தான் எழுத்துப்பூர்வமாக கொடுத்துள்ள ஓராண்டு காலத்துக்கான பிணையத்தை பின்பற்றாமல் தொடர்ந்து மதுவிலக்கு குற்ற செயலில் ஈடுபட்டதால் அவர் பிணையம் அளித்த காலமான 13.7.2021 முதல் 12.7.2022 வரை உள்ள ஓராண்டு காலத்தில் மீதமுள்ள காலமான 12.7.2022 வரை மொத்தம் 349 நாட்கள் தொடர்ந்து சிறையில் அடைக்க கோட்டாட்சியர் சரவணன் உத்தரவிட்டார்.
இதையடுத்து செஞ்சி கிளை சிறையில் இருந்த ராஜாவை கடலூர் மத்திய சிறையில் சங்கராபுரம் போலீசார் அடைத்தனர்.