டாஸ்மாக் பாரின் மேற்கூரை இடிந்து விழுந்தது

டாஸ்மாக் பாரின் மேற்கூரை இடிந்து விழுந்தது

Update: 2021-09-03 16:04 GMT
திருப்பூர், 
திருப்பூரில் பலத்த மழையின் காரணமாக டாஸ்மாக் பாரின் மேற்கூரை இடிந்து விழுந்தது.  இதனால் மது பிரியர்கள் அலறியடித்து ஓட்டம்பிடித்தனர். 
மேற்கூரை இடிந்து விழுந்தது 
திருப்பூர் தென்னம்பாளையத்தில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு அருகே குமார் என்பவர் டாஸ்மாக் பார் நடத்தி வருகிறார். மதுப்பிரியர்கள் டாஸ்மாக் கடைகளில் மதுவாங்கிவிட்டு, பாரில் அமர்ந்து மது அருந்தி செல்வார்கள்.  கொரோனா பாதிப்பின் காரணமாக பல மாதங்களாக டாஸ்மார் பார்கள் இயங்க அனுமதிக்கப்படாமல் இருந்து வருகிறது. இதனால் டாஸ்மாக் பார் செயல்படாமல் இருந்து வந்தது. 
இந்நிலையில் கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக டாஸ்மாக் பாரின் மேற்கூரை ஓடுகள் நன்கு ஊறியிருந்த நிலையில் நேற்று மதியம் திடீரென இடிந்து விழுந்தது. 
உயிர் சேதம் தவிர்ப்பு 
இதனால் டாஸ்மாக் கடையில் மதுவாங்கிக்கொண்டிருந்த மதுபிரியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இது குறித்து தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். தொடர்ந்து டாஸ்மாக் பார் பல மாதங்களாக செயல்படாமல் இருந்ததால் பராமரிக்கப்படாமல் இருந்து வந்துள்ளது. 
இதுபோல் மேற்கூரை மரத்தால் செய்யப்பட்டு, ஓடுகளால் வேயப்பட்டிருந்தது. மழையின் காரணமாகவே விழுந்துள்ளது. இதில் குளிர்சாதன பெட்டி உள்ளிட்ட சில பொருட்கள் சேதமாகின. அதிர்ஷ்வசமாக டாஸ்மாக் பார் செயல்படாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அங்கேரிபாளையம் அருகே டாஸ்மாக் பாரின் காம்பவுண்டு சுவர் இடிந்து விழுந்து 10-க்கும் மேற்பட்டவர்கள் பலியானது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்