வாடகை நிலுவை தொகை செலுத்திய 25 கடைகளின் ‘சீல்’ அகற்றம்
ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் வாடகை நிலுவை தொகை செலுத்திய 25 கடைகளின் சீல் அகற்றப்பட்டது.
ஊட்டி
ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் வாடகை நிலுவை தொகை செலுத்திய 25 கடைகளின் சீல் அகற்றப்பட்டது.
வாடகை நிலுவை
ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் 1,587 கடைகள் உள்ளது. இதற்கு 1.7.2016 அன்று முதல் வாடகை உயர்த்தப்பட்டது. அதன்படி பழைய வாடகை தொகையில் இருந்து 374 சதவீதம் உயர்த்தப்பட்டது. ஆனால் கடந்த 4 ஆண்டு காலமாக உயர்த்தப்பட்ட வாடகை நிலுவையில் இருந்ததால் நகராட்சிக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டு வந்தது.
ஒப்பந்த பத்திரம்
இதைத்தொடர்ந்து நிலுவை தொகையை செலுத்த வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் நிலுவை தொகையை செலுத்த முன்வராததால் கடந்த மாதம் 25-ந் தேதி 736 கடைகளுக்கு சீல் வைத்து அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
எனினும் சீல் வைக்கப்பட்ட கடைகளை திறந்து வாழ்வாதாரத்தை காப்பாற்ற வலியுறுத்தி வியாபாரிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் நிலுவை தொகையை செலுத்திய வியாபாரிகளின் கடைகளை திறப்பதற்கு நகராட்சி மூலம் அனுமதி நகல் வழங்கி சீல் அகற்றப்பட்டு வருகிறது.
அதன்படி இதுவரை 18 வியாபாரிகள் நிலுவை தொகையை முழுமையாக செலுத்தி உள்ளனர். 7 பேர் 50 சதவீத தொகையை செலுத்தி, மீதமுள்ள தொகையை 15 நாட்களுக்குள் செலுத்துவதாக ஒப்பந்த பத்திரம் அளித்தனர்.
ரூ.1 கோடி வசூல்
அதன்பேரில் நகராட்சி வருவாய் அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் 25 கடைகளுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றினர். நேற்று முதல் அந்த 25 கடைகள் திறந்து செயல்பட்டது.
இதுகுறித்து நகராட்சி வருவாய் அலுவலர் பால்ராஜ் கூறும்போது, கடந்த 31-ந் தேதி, நேற்று முன்தினம் ஆகிய 2 நாட்களில் வாடகை நிலுவை தொகை ரூ.60 லட்சம் வசூல் ஆகியது.
சீல் வைத்த நாள் முதல் இதுவரை ரூ.1 கோடி வசூலானது. இன்னும் ரூ.37 கோடி பாக்கி உள்ளது. நிலுவை தொகையை முழுமையாக செலுத்துகிறவர்கள் மற்றும் ஒப்பந்த பத்திரம் மூலம் 50 சதவீத தொகையை செலுத்தும் வியாபாரிகளின் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டு வருகிறது என்றார்.