மகளை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி கைது

கோத்தகிரி அருகே மதுபோதையில் மகளை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-09-03 00:50 GMT
கோத்தகிரி

கோத்தகிரி அருகே மதுபோதையில் மகளை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

பாலியல் பலாத்காரம்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி, அருகில் உள்ள தனியார் தேயிலை தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

இந்த நிலையில் அந்த தொழிலாளி கடந்த 23-ந் தேதி தனது 3 குழந்தைகளையும் தொழிற்சாலையை சுற்றி பார்க்க வாருங்கள் என்றுக்கூறி அழைத்து சென்றார். பின்னர் அங்குள்ள ஒரு அறையில் இளைய மகள் மற்றும் மகனை அமர வைத்தார். 

தொடர்ந்து மூத்த மகளான 15 வயதுடைய சிறுமியை மட்டும் வேறொரு அறைக்கு அழைத்து சென்றார். பின்னர் பெற்ற மகள் என்றும் பாராமல் கயிறால் கைகளை கட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் இதுபற்றி வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார். தொடர்ந்து 3 குழந்தைகளையும் வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டார். அப்போது அவர் மதுபோதையில் இருந்ததாக தெரிகிறது.

போக்சோவில் கைது

இந்த நிலையில் நேற்று முன்தினம் தன்னை தந்தை பாலியல் பலாத்காரம் செய்தது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி, சைல்டு லைன் அமைப்புக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த அமைப்பினர், குன்னூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் நேரில் சென்று, அந்த தொழிலாளியிடம் விசாரணை நடத்தினர். 

அப்போது அவர் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது உறுதியானது. உடனே போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை போலீசார் கைது செய்தனர். பெற்ற மகளையே தந்தை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கோத்தகிரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்