ஊராட்சிக்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் 2-வது நாளாக ஒப்பந்த தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
ஊராட்சிக்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் 2-வது நாளாக ஒப்பந்த தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினா்.
அந்தியூர்
ஈரோடு நீர்மின் உற்பத்தி வட்டத்தில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி துண்டிப்பு செய்திடும் நடவடிக்கையை கைவிட வேண்டும். மின்வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.412 கூலியை பிடித்தம் செய்யாமல் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின் வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் பவானி அருகே உள்ள ஊராட்சிக்கோட்டை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் 2-வது நாளாக நேற்றும் தொடர்ந்து நடந்தது. தமிழ்நாடு மின்வாரிய தேசிய முன்னணி தொழிலாளர் சங்கம் சார்பில் நடந்த இந்த போராட்டத்துக்கு சங்கத்தின் மாநில தலைவர் கே.பி.சுவாமிநாதன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் என்.செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள காவிரி, பவானி நீர்மின் திட்டங்களில் பணியாற்றும் 93 தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் மேற்பார்வை பொறியாளர் ரவிச்சந்திரன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதையொட்டி அந்த பகுதியில் பவானி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.