மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களுக்கு 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை-கலெக்டர் தகவல்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களுக்கு 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ஸ்ரேயாசிங் தெரிவித்தார்.

Update: 2021-09-02 18:12 GMT
எருமப்பட்டி:
கலெக்டர் ஆய்வு
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது அவர் அங்குள்ள நடுநிலைப்பள்ளியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமை பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் பணிக்கு வரும் 2 லட்சத்து 6 ஆயிரத்து 282 தொழிலாளர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் 79 ஆயிரத்து 59 பேர் என மொத்தம் 2 லட்சத்து 85 ஆயிரத்து 341 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
100 சதவீதம்
இவர்களில் கடந்த 31-ந் தேதியுடன் 1 லட்சத்து 41 ஆயிரத்து 520 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் 5,100 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதன் மூலம் இதுவரை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 46 ஆயிரத்து 620 ஆக அதிகரித்து உள்ளது. விரைவில் அனைத்து பணியாளர்களுக்கும் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் தேசிய ஊட்டச்சத்து வார விழா கொண்டாடப்பட்டது. இதில் கலெக்டர் ஸ்ரேயாசிங் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஒன்றிய அலுவலகத்தில் தொடங்கிய இந்த ஊர்வலம் எருமப்பட்டி பஸ் நிலையத்தில் முடிவடைந்தது. இதில் மாவட்ட திட்ட அலுவலர் ஜான்சிராணி, எருமப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருளாளன், குணாளன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்