திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் கலெக்டர் ‘திடீர்’ ஆய்வு

திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா என்று கலெக்டர் முருகேஷ் ஆய்வு செய்தார்.

Update: 2021-09-02 15:43 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா என்று கலெக்டர் முருகேஷ் ஆய்வு செய்தார்.

 கல்லூரிகள் திறப்பு

கொரோனா தொற்று குறைய தொடங்கியதை தொடர்ந்து தமிழகத்தில் நேற்று முன்தினம் முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. 

அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும், கல்லூரிகளும் திறக்கப்பட்டு உள்ளன. 

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 56 கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இளங்கலை 2-ம் ஆண்டு 12 ஆயிரத்து 217 மாணவ, மாணவிகளும், 3-ம் ஆண்டு 12 ஆயிரத்து 816 மாணவ, மாணவிகளும், முதுகலை 2-ம் ஆண்டு 1958 மாணவ, மாணவிகளும் என மொத்த 26 ஆயிரத்து 987 மாணவ, மாணவிகள் உள்ளனர். இவர்களில் 16 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. 

கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் என மாவட்டத்தில் உள்ள 3 ஆயிரத்து 700 பேரில், 3 ஆயிரத்து 550 பேர் தடுப்பூசி போடப்பட்டு உள்ளனர்.

 கலெக்டர் ஆய்வு

திருவண்ணாமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழக அரசு வெளியிட்டுள்ள நிலையான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்றும், கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றதையும் மாவட்ட கலெக்டர் முருகேஷ் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

அப்போது கல்லூரி நுழைவு வாயில் முன்பு மாணவர்கள் சிலர் சமூக இடைவெளியின்றி காணப்பட்டனர். 

இதுகுறித்து கல்லூரி முதல்வரிடம் மாணவ, மாணவிகள் கல்லூரிக்கு வருவதில் இருந்து வீட்டிற்கு செல்லும் வரை கண்காணிக்க வேண்டும். 

சமூக இடைவெளியை பின்பற்ற மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்றார்.

 கொரோனா தடுப்பூசி

தொடர்ந்து கல்லூரியில் பயிலும் மாணவர்கள் முதல் பேராசிரியர்கள், ஊழியர்கள் என அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். 

மேலும் ஒவ்வொரு வகுப்பறைக்கும் சென்று மாணவர்கள் சமூக இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டு உள்ளனரா என்றும் பார்வையிட்டார். 

அப்போது கலெக்டர் மாணவ, மாணவிகளிடம் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். வீட்டில் உள்ளவர்களை தடுப்பூசி போட்டு கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

தடுப்பூசி போட்டு கொள்வதால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று அறிவுரை வழங்கினார். 

ஆய்வின் போது உதவி கலெக்டர் (பயிற்சி) கட்டாரவிதேஜா, உதவி கலெக்டர் வெற்றிவேல், அரசு கலைக்கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், டாக்டர்கள், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்