செலவுக்கு பணம் தராததால் 90 வயது மூதாட்டி கழுத்தை நெரித்துக்கொலை பேரன் கைது

செலவுக்கு பணம் தராததால் 90 வயது மூதாட்டி கழுத்தை நெரித்துக்கொலை

Update: 2021-09-02 13:58 GMT
ஆறுமுகநேரி:
செலவுக்கு பணம் தராததால் 90 வயது மூதாட்டியை கழுத்தை நெரித்துக் கொலை செய்த பேரனை போலீசார் கைது செய்தனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
மூதாட்டி
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் விசாலாட்சி அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் செய்யது சுல்தான். இவரது மனைவி சிந்தா பீவி (வயது 65). இவர்களுக்கு மைதீன் பீவி என்ற மகளும், காசிம் மீரான் (28) என்ற மகனும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. காசிம் மீரான் மனைவி பிரிந்து சென்று விட்டார்.
இந்தநிலையில் காசிம் மீரான் வெளியூர்களுக்கு சென்று வேலை செய்து வருகிறார். இவர்களுடன் சிந்தா பீவியின் தாயார் மைமூன் (90) என்பவரும் வசித்து வந்தார்.
நடக்க முடியாமல் அவதி
இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மைமூன் கீழே விழுந்து நடக்க முடியாமல் அவதிப்பட்டார். இதையடுத்து மருத்துவ சிகிச்சைக்கு பிறகு வீட்டிலேயே இருந்து வந்தார். 
கடந்த 31-ந் தேதி மாலை மைமூன் வீட்டில் கீழே விழுந்து கிடந்தார். அப்போது அங்கு வந்த பேத்தி மைதீன் பீவி பார்த்தபோது மைமூன் மூச்சு இல்லாமல் கிடந்ததை அறிந்து திடுக்கிட்டார். உடனே அவரை காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்ததில், மைமூன் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
போலீஸ் விசாரணை
இது தொடர்பாக ஆறுமுகநேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமலோற்பவம் வழக்குப்பதிவு செய்தார்.
மைமூன் சாவில் சந்தேகம் ஏற்பட்டதால் இது தொடர்பாக ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் துருவி துருவி விசாரணை நடத்தினார்.  விசாரணையில், மைமூனை பேரன் காசிம் மீரான் கழுத்தை நெரித்துக் கொைல செய்தது தெரியவந்தது.
பணம் கேட்டு தொல்லை
 காசிம் மீரான் வெளியூர்களுக்குச் சென்று வேலை பார்த்துவிட்டு வந்து தனது தாய் மற்றும் பாட்டியிடம் செலவுக்கு பணம் கேட்டு தொந்தரவு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். சம்பவத்தன்று இதேபோல் வீட்டில் யாரும் இல்லாதபோது தனது பாட்டியிடம் செலவுக்கு பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக குடிபோதையில் இருந்த காசிம் மீரான் பாட்டியின் கழுத்தை நெரித்துக்கொலை செய்தது, போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக ஆறுமுகநேரி போலீசார், காசிம் மீரான் மீது கொலை வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கைது செய்து திருச்செந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்