ஹெல்மெட் அணியாதவர்கள் மீது 12 ஆயிரத்து 92 வழக்குகள் பதிவு

நீலகிரியில் கடந்த மாதத்தில் ஹெல்மெட் அணியாதவர்கள் மீது 12 ஆயிரத்து 92 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் கூறினார்.

Update: 2021-09-02 01:00 GMT
ஊட்டி

நீலகிரியில் கடந்த மாதத்தில் ஹெல்மெட் அணியாதவர்கள் மீது 12 ஆயிரத்து 92 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் கூறினார்.

ஹெல்மெட் கட்டாயம்

நீலகிரி மாவட்டத்தில் 5 காவல் உட்கோட்டங்கள் உள்ளன. இங்கு கடந்த 3 ஆண்டுகளில் இருசக்கர வாகன விபத்துகளில் உயிரிழப்புகள் அதிகமாக நிகழ்ந்தது. இதற்கு காரணம் இருசக்கர வாகனங்களில் பயணித்தவர்கள் ஹெல்மெட் அணியாமல் சென்றதே என்பது தெரியவந்தது. 

மேலும் கை, கால்கள் பாதிக்கும் நிலை இருந்தது. இதுபோன்ற விபத்துக்களை தடுக்கும் வகையில் இருசக்கர வாகனத்தில் 2 பேர் மட்டுமே பயணிக்க வேண்டும், அவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதிமுறை நீலகிரியில் கடந்த மாதம் 1-ந் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதற்கு பொதுமக்கள் மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்களும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று காவல்துறை மூலம் அறிவிக்கப்பட்டு இருந்தது. 

மலர்கள் வழங்கி பாராட்டு

இதைத்தொடர்ந்து ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர், கூடலூர், பந்தலூர் ஆகிய பகுதிகளில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிந்து உள்ளார்களா என்று போலீசார் சோதனை நடத்தினர். ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள் மீது வழக்குப்பதிந்ததுடன் அபராதம் விதித்தனர்.

பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்வதால் போலீசார் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் ஹெல்மெட் அணிந்திருந்தால் மலர்கள் வழங்கி பாராட்டினர். நீலகிரியில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 12 ஆயிரத்துக்கும் மேல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

12 ஆயிரத்து 92 வழக்குகள்

இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் கூறியதாவது:- லகிரி மாவட்டத்தில் வாகன சோதனை நடத்தப்பட்டு இருசக்கர வாகனத்தில் முன்னால் மற்றும் பின்னால் அமர்ந்து செல்லும் நபர்கள் ஹெல்மெட் அணியாமல் சென்றதற்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

கடந்த ஒரு மாதத்தில் ஊட்டி நகரத்தில் 2,573 வழக்குகள், ஊட்டி ஊரகத்தில் 1,638 வழக்குகள், குன்னூரில் 5,344 வழக்குகள், கூடலூரில் 1,948 வழக்குகள், தேவாலாவில் 589 வழக்குகள் என மொத்தம் 12 ஆயிரத்து 92 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இனிவரும் காலங்களில் இருசக்கர வாகனங்களில் செல்லும் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து பயணம் செய்து விபத்துக்கள் மற்றும் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்