தொழிலாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட தொழிலாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
பெரம்பலூர்
கடலூர் மாவட்டம், விருதாச்சலம் தாலுகா, காந்தி நகரை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 38). இவர் தனது மனைவியுடன் பெரம்பலூர் அருகே துறைமங்கலம் பங்களா ஸ்டாப் எதிரே உள்ள நியூ காலனியில் வசித்தார். ஆனந்தராஜ் அங்குள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தொழிலாளியாக வேலை பார்த்தார்.
சம்பவத்தன்று விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமியை ஆனந்தராஜ் தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமியின் தாய், பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆனந்தராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
குண்டர் சட்டம் பாய்ந்தது
இந்தநிலையில் ஆனந்தராஜை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடுமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி, கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் ஆனந்தராஜை கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து திருச்சி மத்திய சிறையில் இருந்த ஆனந்தராஜிடம் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கான ஆணையின் நகலை பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் வழங்கினர்.