மோகனூர் அருகே ஆரியூரில் கோவில் திருப்பணிக்கு மண் தோண்டிய போது பழங்கால நந்தி சிலை கண்டுபிடிப்பு

மோகனூர் அருகே ஆரியூரில் கோவில் திருப்பணிக்கு மண் தோண்டிய போது, பழங்கால நந்தி சிலை கண்டெடுக்கப்பட்டது.

Update: 2021-09-01 18:59 GMT
மோகனூர்:
செல்லாண்டியம்மன் கோவில் திருப்பணி
நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்த ஆரியூரில் பிரசித்திபெற்ற செல்லாண்டியம்மன் மற்றும் பாண்டீஸ்வரர் கோவில்கள் அருகருகே உள்ளன. பாண்டீஸ்வரர் கோவில் பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்த போது கட்டப்பட்ட நூற்றாண்டுகள் பழமை வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த கோவிலில் பாண்டீஸ்வரர், வேதநாயகி அம்மன், ஆறு முகங்களை கொண்ட முருக கடவுள் சிலைகள் இருந்ததாகவும், அதை பக்தர்கள் வழிபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. 
ஆனால் கால மாற்றம் மற்றும் வேற்று மத ஆட்சியாளர்கள் இந்த பகுதியை ஆண்ட போது, கோவிலில் உள்ள வேதநாயகி மற்றும் முருக கடவுள் சிலைகள் அகற்றப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதன்பிறகு இந்த சிலைகள் நிறுவப்படவில்லை. அதற்கான திருப்பணிகள் நடைபெறாமல் கோவில் இன்றளவும் காட்சி அளிக்கிறது.
இந்த கோவிலுக்கு அருகே உள்ள செல்லாண்டியம்மன் கோவிலை புதுப்பிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. சுற்றுச்சுவர் கட்டுவதற்காக பணியாளர்கள் நேற்று பாண்டீஸ்வரர் கோவில் முன்பு மண் தோண்டினார்கள். 
நந்தி சிலை 
அப்போது மண்ணில் புதைந்த நிலையில் பழமையான நந்தி சிலை ஒன்று சேதமடைந்த நிலையில் இருந்ததை பார்த்து கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து கோவில் நிர்வாகத்தினர் வருவாய் துறைக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து ஆரியூரை சேர்ந்த பழனியப்பன் மற்றும் தோப்பூரை சேர்ந்த ஓமியோபதி டாக்டர் சந்திரன் ஆகியோர் கூறியதாவது:-
மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் நமது நாட்டை ஆட்சி செய்த பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட கோவில் என்பதால் இதற்கு பாண்டீஸ்வரர் என பெயர் வந்திருக்கலாம். பாண்டிய மன்னர்களுக்கு பின்னர் ஆட்சி செய்த முகலாய மன்னர்கள் காலத்தில் இந்து கோவில்களையும், அதில் உள்ள சிலைகளையும் சேதப்படுத்தியும், அழித்தும் அப்புறப்படுத்தி இருக்கலாம்.
மேலும் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவில் வளாகத்தில் வெள்ளை கற்களால் ஆன விநாயகர் சிலையும், பெரிய நந்தி சிலையும் சேதம் அடைந்த  நிலையில் இருந்தன. அதை சேலம் தொல்லியல் துறையினர் ஆராய்ச்சிக்காக எடுத்து சென்று, சேலம் அருங்காட்சியகத்தில் வைத்துள்ளனர். தற்போது கிடைத்த இந்த சிலையும், சேதமடைந்து இருப்பதால், இதுவும் பாண்டீஸ்வரர் கோவில் சிலையாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர். 
கோரிக்கை
செல்லாண்டியம்மன் கோவில் திருப்பணி நடைபெறும் நிலையில் கோவில் வளாகத்தில் நந்தி சிலை கண்டுபிடிக்கப்பட்டது பக்தர்கள் இடையே பரபரப்பாக பேசப்படுகிறது. தற்போதைய நிலையில், பாண்டீஸ்வரர் கோவில் திருப்பணியையும் சேர்த்து முடிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
மேலும் இந்த பகுதியில் தொல்லியல் துறையினர் ஆய்வு செய்வதன் மூலம், கோவிலின் வரலாறு, மற்றும் எத்தனை ஆண்டுகள் பழமையான கோவில் என்பது தெரியவரும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்