திருவண்ணாமலையில் சிறுமி விழுங்கிய ஒரு ரூபாய் நாணயம் அறுவை சிகிச்சையின்றி அகற்றம்
திருவண்ணாமலையில் சிறுமி விழுங்கிய நாணயம் அறுவை சிகிச்சையின்றி அகற்றப்பட்டது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை அய்யாகண்ணு தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவரது 6 வயது மகள் விளையாடி கொண்டிருந்த போது ஒரு ரூபாய் நாணயத்தை விழுங்கி உள்ளாள்.
இதனையடுத்து சிறுமியை சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். பின்னர் சிறுமியை ஸ்கேன் செய்து பார்த்த போது உணவு குழாயின் கீழ் பகுதியில் நாணயம் இருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து காது, மூக்கு, தொண்டை பிரிவு துறைத் தலைவர் டாக்டர் இளஞ்செழியன், மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்ரீதர், மயக்கவியல் துறைத்தலைவர் பாலமுருகன் மற்றும் டாக்டர்கள் கமலகண்ணன், செந்தில்ராஜா ஆகியோர் கொண்ட குழுவினர் குழந்தைக்கு மயக்க மருந்து அளித்து அறுவை சிகிச்சை இல்லாமல் எண்டோஸ்கோப் முறையில் குழந்தையின் உணவு குழாயில் இருந்த நாணயம் அகற்றப்பட்டது.
தற்போது குழந்தை நலமுடன் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மருத்துவ குழுவினரை மருத்துவக்கல்லூரி டீன் திருமால்பாபு உள்பட டாக்டர்கள் பாராட்டினர்.